Published : 20 Mar 2018 08:51 AM
Last Updated : 20 Mar 2018 08:51 AM

ரஷ்ய அதிபர் தேர்தலில் 76% வாக்குகளுடன் அமோக வெற்றி: 4-வது முறை அதிபரானார் புதின்

ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் 76 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 4-வது முறையாக அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் அதிபர் விளாடிமிர் புதின் உட்பட 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 11 கோடி பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இதில் 7 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 312 பேர் வாக்குரிமையை செலுத்தினர். அதாவது 67.49 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் நள்ளிரவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அதிபர் விளாடிமிர் புதின் 76.66 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் வேட்பாளர் பவெல் குருடினினுக்கு 11.80 சதவீத வாக்குகள் கிடைத்தன. லிபரல் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் விளாடிமிர் சிரினோவ்ஸ்கிக்கு 5.66 சதவீத வாக்குகளும், தொலைக்காட்சி அறிவிப்பாளர் செனியா சோப்சக்கிற்கு 1.6 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதர வேட்பாளர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றனர்.

புதின் அரசியல் பயணம்

கடந்த 1952 அக்டோபர் 7-ம் தேதி விளாடிமிர் ஸ்பிரிடோனிவிச் புதின், மரியா இவானோவ்னா தம்பதியின் மகனாக விளாடிமிர் புதின் பிறந்தார். 1975-ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். அதே ஆண்டு ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபியில் சேர்ந்தார். 1991-ல் கேஜிபியில் இருந்து ஓய்வு பெற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த 1998-ல் அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சின் நிர்வாகத்தில் இணைந்தார். 1999-ல் அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசின் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது ரஷ்யாவின் பிரதமராக விளாடிமிர் புதின் நியமிக்கப்பட்டார். 1999-ல் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்ததால் செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார்.

பின்னர் 2010, 2014 அதிபர் தேர்தல்களில்வெற்றி பெற்றார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபரானார். தற்போது 4-வது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோடி வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் புதினை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது புதினின் 6 ஆண்டுகால ஆட்சியில் இந்திய, ரஷ்ய நட்புறவு மேலும் வலுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x