Published : 20 Mar 2018 08:50 AM
Last Updated : 20 Mar 2018 08:50 AM

உலக மசாலா: உலகின் மிகச் சிறந்த ஆசிரியர்

ங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயது ஆண்ட்ரியா ஜஃபிராகவ் உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். இவருக்குச் சுமார் 6.5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது! ஆண்ட்ரியா இங்கிலாந்தின் மிக மோசமான சமூகச் சூழல் நிலவும் ப்ரென்ட் பகுதியில் புலம்பெயர்ந்தவர்களுக்கான பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு இந்தி, தமிழ், குஜராத்தி, போர்ச்சுகீஸ், அரபிக், உருது, சோமாலி உட்பட 35 மொழிகள் தெரியும்! ஒவ்வோர் ஆண்டும் வர்கி ஃபவுண்டேஷன் ’க்ளோபல் டீச்சர்’ விருதை வழங்கி வருகிறது. 173 நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன. மிகக் கடுமையான போட்டி. இவற்றிலிருந்து இங்கிலாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, பிரேசில், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நார்வே நாடுகளைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்தனர். அவர்களில் இருந்து ஆண்ட்ரியா முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துபாயில் விருது வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

“ஆசிரியர் பணியையும் தாண்டி பல விஷயங்களை ஆண்ட்ரியா செய்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் வீட்டுக்கும் சென்று அவர்களுடைய கல்வியிலும் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களிடம் உரையாடும் அளவுக்கு அடிப்படை மொழியறிவைக் கற்று வைத்திருக்கிறார். இதனால் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு மேம்பட்டிருக்கிறது” என்கிறார் விருது அமைப்பைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர்.

“பள்ளி காலை 6 மணிக்குதான் ஆரம்பமாகும். ஆனால் குழந்தைகள் 5 மணிக்கே வந்து காத்திருப்பார்கள். எங்கள் பள்ளியில் ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் சேர்ந்த மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள்தான் படிக்கிறார்கள். பள்ளிப் பாடங்களுடன் நடனம், இசை, ஓவியம் என்று பலவற்றையும் நான் சேர்த்திருக்கிறேன். பலருக்கும் நல்ல உணவு வீட்டில் கிடைப்பதில்லை. அதனால் ஒருவேளை சத்தான உணவைத் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பெரும்பாலான குழந்தைகளுக்குப் பள்ளி முடிந்தவுடன் வீட்டு வேலைகள் அதிகம் இருக்கின்றன. அதனால் அவர்களால் வீட்டில் எழுத, படிக்க நேரம் இருப்பதில்லை. அவர்களைப் பள்ளியிலேயே கூடுதல் நேரம் தங்க வைத்து, எல்லாவற்றையும் செய்யச் சொல்லிவிடுவேன். இது என் தனிப்பட்ட சாதனை இல்லை. மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இதில் இருக்கிறது. அதனால் எங்கள் பள்ளிக்கும் சக ஆசிரியர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். பரிசுப் பணத்தை உலகக் குழந்தைகளின் கல்விக்காகச் செலவிட இருக்கிறேன். இன்னும் 5 ஆண்டுகளாவது ஆசிரியப் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் ஆண்ட்ரியா.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உட்பட பலரும் ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஆசிரியருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

உலகின் மிகச் சிறந்த ஆசிரியருக்கு ஒரு பூங்கொத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x