Published : 03 Mar 2018 02:40 PM
Last Updated : 03 Mar 2018 02:40 PM

மனிதநேயம் காக்கும் கல்சா எய்ட்: சிரியா மக்களை நெகிழச் செய்த சீக்கியர்களின் உதவி

 

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து, கொத்து கொத்தாக மக்கள் மடிந்துவரும் நிலையில், போர்க்களத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு சீக்கியர்களின் 'கல்சா எய்ட்' என்ற தொண்டு நிறுவனம் உணவு, உடைகள், காலனிகள் கொடுத்து உதவி வருகிறது.

மனிதநேயத்துக்கும், உதவிக்கும் நிறம், இனம், பார்க்கத் தேவையில்லை என்பதை உலக அரங்கில் சீக்கியர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் குடும்பமே கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக பஷாரின் தந்தை ஹபீஸ் ஆட்சி செய்தார். இப்போது கடந்த 10 ஆண்டுகளாக அவரின் மகன் பஷார் அல் அசாத் ஆட்சி நடத்தி வருகிறார். இவர்களின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி மருகி, வேலையின்மையும், வறுமையும் பெருகியது.

இதனால், மக்களில் ஒருபகுதியினர் அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். சிறிய அளவில் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போர் இன்று சர்வதேச நாடுகள் களமிறங்கி நடத்தும் அளவுக்கு மிகப்பெரிய போராக வளர்ந்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் ஆதரவையும் அமெரிக்கா அளித்து வருகிறது. மற்றொரு பக்கம் அரசுக்கு ஆதரவாக ரஷியா களத்தில் குதித்துள்ளது. இதனால், கடந்த 7 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போரில் உயிரிழந்தனர்.

இதில் கடந்த சில வாரங்களாக தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் ஜெட்டா நகரை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிரமாக போராடி வருகின்றன.

இதில் கடந்த சில வாரங்களாக அரசுப்படைகள் விமானங்கள், மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பிஞ்சு குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், முதியவர்கள் என 800-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

கிழக்கு ஜெட்டாவில் வாழும் மக்கள் வீடுகளை இழந்து சாலைகளில் கடும் குளிரில் உயிர்வாழ்ந்து வருகின்றனர். குண்டுகளுக்கு அஞ்சி, பதுங்கு குழிகளில் வசிக்கின்றனர்.

இவர்களின் நிலையைப் பார்த்து இங்கிலாந்தில் செயல்படும் கல்சா எய்ட் எனும் சீக்கிய அமைப்பு சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த சிலவாரங்களாக களத்தில் இறங்கி உதவி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குழந்தைகளுக்கும், குடிநீர், உடைகள், உணவுகள், காலனிகள், போர்வைகள், மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் அளித்து தங்கள் மனித நேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏறக்குறைய இதுவரை 14 டன் உணவுப் பொருட்களை சிரியா மக்களுக்கு அளித்து உதவி இருப்பதாக கல்சா எய்ட் அமைப்பு அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கல்சா எய்ட் அமைப்பு உதவி வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் ரசாயன குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளை காப்பாற்றி ஒரு சீக்கியர் பராமரித்து வருகிறார். அந்த புகைப்படத்தையும் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது.

யார் இந்த 'கல்சா எய்ட்'?

இங்கிலாந்தை தலைமை அலுவலகமாக கொண்டு சீக்கியர்களால் கல்சா எய்ட் எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகில் பூகம்பம், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் நடக்கும் போதெல்லாம் அங்கு சென்று இந்த அமைப்பினர் உதவி வருகின்றனர்.

ரவிந்தர் சிங் என்ற சீக்கியரால் அந்த கல்சா எய்ட் அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1999-ம் ஆண்டு, யுகோஸ்லோவோகியா போரில் கோசாவா நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலில் உதவி செய்தது. அதன்பின் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறது. அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும், அனைத்து மனிதர்களும் ஒன்றே என்ற தத்துவத்தில் இந்த கல்சா எய்ட் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.

கல்சா எய்ட் அமைப்பின் மூலம் சிரியா மக்களுக்கு சீக்கியர்கள் செய்யும் உதவி சமூக வலைதளங்களில் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x