Last Updated : 03 Mar, 2018 09:10 AM

 

Published : 03 Mar 2018 09:10 AM
Last Updated : 03 Mar 2018 09:10 AM

ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி: எதையும் எதிர்கொள்ள தயார்- அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்திய அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை எந்தவொரு ஏவுகணை தடுப்பு அரணாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. உலகின் எந்த மூலையையும் தாக்கும் திறன் கொண்டது. ரஷ்யாவின் தற்காப்புக்காகவே இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கியையும் ரஷ்யா தயாரித்துள்ளது. இந்த வகை நீர்மூழ்கிகள் பல்வேறு நாடுகளில் உள்ள நீர்மூழ்கிகளைவிட அதிவேகமாக செல்லக்கூடியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிபர் புதின் பேசியபோது, ஹைப்பர்சானிக் ஏவுகணை சீறிப் பாயும் அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தை ஏவுகணை தாக்குவதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹைப்பர்சானிக் ஏவுகணை குறித்து ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் கூறியபோது, “தென்கொரியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏவுகணை தடுப்பு அரண்களை அமெரிக்கா நிறுவியுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தற்காப்பு நடவடிக்கையாக அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணையை தயாரித்துள்ளோம்” என்று தெரிவித்தன.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், வாஷிங்டனில் நேற்று கூறியபோது, “அமெரிக்கா, ரஷ்யா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களை மீறி நாசகார ஆயுதங்களை அந்த நாடு தயாரித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. ரஷ்யாவின் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு அதிக நிதியை ஒதுக்கி வருகிறார்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் டானா வொயிட் கூறியபோது, “நாங்கள் எப்போதுமே தயார் நிலையில் உள்ளோம், எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் அமெரிக்க ராணுவத்துக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x