Published : 13 Feb 2018 10:24 AM
Last Updated : 13 Feb 2018 10:24 AM

உலக மசாலா: பூனைகளின் காவலர்!

நி

யூயார்க்கில் வசிக்கும் கிறிஸ் அர்செனாட், வீட்டிலேயே பூனைகள் சரணாலயத்தை அமைத்திருக்கிறார். 58 வயது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர், பூனைகளை வளர்ப் பதற்கு நெகிழ்ச்சியான காரணம் இருக்கிறது. 2006-ம் ஆண்டு இவரது மகன் எரிக், 24 வயதில் விபத்தில் இறந்து போனார். அதில் மிகவும் உடைந்து போனார் கிறிஸ். மகன் மறைந்து 2 மாதங்களாகியும் துயரத்திலிருந்து மீள முடியவில்லை. “ரயிலில் ஒரு ட்ரிப் முடித்த பிறகு விரக்தியாக நிலையத்தில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் தண்டவாளங்களில் சில பூனைகள் சுற்றிக்கொண்டிருந்ததைக் கண்டேன். இப்படிப் பல வருடங்களாக பூனைகளைப் பார்த்திருந்தாலும் அன்று ஏனோ புதிதாகத் தெரிந்தது. என் மகனே பூனைகளாக மாறியதுபோல் தோன்றியது. வேகமாகச் சென்று பூனைகளைத் தூக்கினேன். உணவளித்தேன். பிறகு தினமும் அந்த ரயில் நிலையத்துக்கு சென்று உணவளித்தேன். ஒருகட்டத்தில் என் வரவுக்காக பூனைகள் காத்திருக்க ஆரம்பித்தன. விடுமுறை நாட்களில் பூனைகள் ஏமாற்றம் அடைந்துவிடும் என்று வருத்தமாக இருந்தது. சில பூனைகள் நோய்வாய்ப்பட்டிருந்ததைக் கண்டேன். இப்படியே விட்டால் அவை இறந்துவிடலாம். உடனே 20 பூனைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். பூனைகளுக்கு மருத்துவம் பார்த்தேன். ஆரோக்கியமான உணவுகளை அளித்தேன். நானும் என் மனைவியும் பூனைகள் வந்ததுமுதல் மிகவும் பரபரப்பாக இருந்தோம். எங்கள் மகன் பற்றிய துன்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போனது. 12 ஆண்டுகளில் பூனைகள் குட்டி போட்டதால் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன. சாலைகளில் ஆதரவின்றி திரியும் பூனைகள், விலங்குகள் மையத்தில் வளர்க்க முடியாத பூனைகள் எல்லாம் எங்களிடம் வந்து சேர்ந்தன. இதனால் சுமார் 300 பூனைகள் எங்கள் வீட்டில் சேர்ந்துவிட்டன.

அதனால் வீடு, தோட்டம் முழுவதும் பூனைகள் நிறைந்திருக்கின்றன. இரவில் மட்டும் படுக்கையறையில் இருந்து பூனைகளை வெளியேற்றி விடுவேன். அதிகாலை நான் கதவைத் திறப்பதற்காக 60 பூனைகளாவது காத்துக்கொண்டிருக்கும். இவை எல்லாமே கைவிடப்பட்ட பூனைகள் என்பதால், மனிதர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகின்றன. உணவு, பால், தண்ணீர் வைப்பது, இடத்தைச் சுத்தம் செய்வது, மருந்து கொடுப்பது என்று நாள் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அலுப்பே தெரியாது. இவற்றில் எப்போதும் 30 பூனைகளுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டியிருக்கும். நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பூனைக்கும் ஒவ்வொரு நிறத்தில் தாளை ஒட்டி வைத்துவிடுவேன். அதனால் எந்தப் பூனைக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது எளிதாக இருக்கிறது. உணவு, பால், மருந்து, இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு செலவு அதிகமாகும். 2016-ம் ஆண்டு மட்டும் சுமார் 64 லட்சம் ரூபாய் செலவானது. பலரும் விருப்பப்பட்டு நன்கொடைகள் வழங்குகிறார்கள். அதனால் தாக்குப்பிடிக்க முடிகிறது. எங்களால் பூனைகள் பலன் பெறவில்லை, பூனைகளால் நாங்கள்தான் துன்பத்தை மறந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம்” என்கிறார் கிறிஸ்.

பூனைகளின் காவலர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x