Last Updated : 11 Feb, 2018 03:44 PM

 

Published : 11 Feb 2018 03:44 PM
Last Updated : 11 Feb 2018 03:44 PM

அபுதாபியில் முதல் இந்து கோயில்: அடிக்கல் நாட்டினார் மோடி

 

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி நகரில் முதல் இந்து கோயில் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

மேற்கு ஆசியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தினம், ஜோர்டான் நாடுகளில் பயணத்தை முடித்து, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு நேற்று மோடி வந்தார்.

2015-ம் ஆண்டுக்குப் பின் இந்த நாட்டுக்கு பிரதமர் மோடி 2-வது முறையாக வந்துள்ளார். அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் ஜயத் அல் நயானைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாட்டுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து, அங்குள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்ற மோடி, மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, துபாயில் உள்ள ஒபேரா ஹவுசில் நடந்த நிகழ்ச்சியில், அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலான ஸ்ரீ அக்ஷார் புருசோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா ஆலயத்துக்கான திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பிரசிங் மூலம் தொடங்கி வைத்தார். 55 ஆயிரம் சதர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த கோயில், 2020-ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஒபேரா ஹவுசில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின் அங்கிருந்த இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த கோயில் கட்டுவதற்கு துணையாக இருக்கும் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இந்தியா மீது மிகுந்த மரியாதையும், மதிப்பையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்தியாவின் கலாச்சாரத்தை எண்ணி பெருமை கொள்கிறார்கள். ஆதலால், எந்தவிதமான தவறும் நடக்காமல் பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும். இங்கு வழிபாடு நடத்த வருபவர்களும், கட்டுமானத்துக்கு உதவுபவர்களும் மற்றவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவையும் தரக்கூடாது. இதுதான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

125 கோடி இந்தியர்களுக்காக வளைகுடா நாட்டில் இந்த கோயிலைக் கட்ட அனுமதி அளித்த அபுதாபி இளவரசர் முகம்மது பின் ஜயத் அல் நயானுக்கு எனது நன்றியையும், 125 கோடி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்தக் கோயில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். மனிதநேயத்தின் பிறப்பிடமாக கோயில் இருக்கிறதுஎன்கிற கலாச்சாரத்தை வளர்த்து இருக்கிறோம். புனிதமான இடங்கள் மனிதநேயம், ஒற்றுமையின் முகவர்களாகும்.

இந்த கோயில் கட்டிடக் கலைக்கும், சிறப்புகளின் மொத்த வடிவமாக மட்டும் இருக்காது, உலகமே ஒரு வாசுதேவக் குடும்பம் என்பதை உணர்த்தும் என்று நம்புகிறேன்.''

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x