Published : 05 Feb 2018 10:37 AM
Last Updated : 05 Feb 2018 10:37 AM

‘‘ராம ராஜ்யத்தை கொண்டு வருகிறார்’’ - ட்ரம்புக்கு ஆதரவாக அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி

அமெரிக்காவில் திறமையானவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்ற அதிபர் ட்ரம்பின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து வெள்ளை மாளிகை முன் இந்தியர்கள் பேரணி நடத்தினர்.

அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) அதிபர் டொனால்டு ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற தகுதி அடிப்படை யில் அனுமதிக்கும் முறைக்கு மாற வேண்டிய தருணம் வந்துள்ளது.

 அதாவது திறமையான தொழில்நுட்ப) ஊழியர்கள், இங்கு பணியாற்ற விரும்புகிறவர்கள், நம் நாட்டுக்கு பங்களிப்பை அளிக்கக் கூடியவர்கள், நாட்டை நேசித்து மதிக்கக் கூடியவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இனி குடியுரிமை வழங்கப்படும்’’ எனக்கூறினார்.

அமெரிக்காவில் தற்போது நிரந்தரமாக வசிக்க வழங்கப்படும் கிரீன் கார்டு, ஒரு நாட்டிற்கு 9.800 என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் கூடுதலாக 50,000க்கும் மேற்பட்டோர் குடியுரிமை கிடைக்காமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் குடியுரிமை என்ற அறிவிப்பால், அதிகமான இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

எனவே அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் அதிபர் ட்ரம்பின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து அதிபரின் வெள்ளை மாளிகை முன் இந்தியர்கள் பேரணி நடத்தினர். இதில், 800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐடிதுறையில் பணியாற்றுபவர்கள் ஆவர்.

குடியரசு கட்சி ஆதரவு இந்து அமைப்பினர் நடத்திய இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் ட்ரம்புக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ‘ட்ரம்ப் இந்துக்கள் மீது அன்பு செலுத்துகிறார், ட்ரம்ப் இந்தியா மீது அன்பு செலுத்துகிறார், ட்ரம்ப் ராம ராஜ்யத்தை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார். இந்தியர்கள் ட்ரம்ப் மீது அன்பு வைத்துள்ளார்’’ என கோஷமிட்டனர்.

இதுகுறித்து குடியரசு இந்து கூட்டணி அமைப்பைச் சேர்ந்த கிருஷ்ண பன்ஸால் கூறுகையில் ‘‘ட்ரம்பின் அறிவிப்பின் மூலம் ஏராளமான இந்தியர்கள் பயனடைவர். அதிகமான திறமை கொண்ட இந்தியர்கள், அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x