Published : 13 Oct 2017 10:04 AM
Last Updated : 13 Oct 2017 10:04 AM

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் ஆஜராக நவாஸ் ஷெரீப் மகன்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம்: இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் ஊழல் விவகாரங்கள் பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி பிரதமர் பதவியை இழந்தார் நவாஸ் ஷெரீப். மேலும், நவாஸ், அவரது மகன்கள் ஹசன், ஹுசைன், மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை ஆணையம் (என்ஏபி) நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்தது. இதுகுறித்து என்ஏபி அதிகாரிகள் நேற்று கூறிய தாவது:

நவாஸ் மகன்கள் ஹசன், ஹுசைன் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் ஆஜராகவில்லை என்றால், அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களுடைய சொத்துக்களும் முடக்கப்படும்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவு நகல் ஷெரீப் குடும்பத்தாரின் வீட்டு கதவுகளில் ஒட்டப்பட்டுவிட்டன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ஹசன் மற்றும் ஹுசைன் ஆகியோர் தற்போது இங்கிலாந்தில் தாய் குல்சூமுடன் உள்ளனர். இதற்கிடையில் நவாஸ் ஷெரீப்பின் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் எம்.பி. பெர்வெய்ஸ் ரஷீத் கூறும்போது, ‘‘ஹசனும் ஹுசைனும் இங்கிலாந்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய கம்பெனிகளின் கணக்குகளை இங்கிலாந்து அரசு தணிக்கை செய்து வருகிறது. இருவரும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். எனவே, நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்கள்’’ என்றார்.

ஆனால், நவாஸ், அவரது மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் விசாரணையில் பங்கேற்பார்கள் என்று அவர் கூறினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x