Last Updated : 23 Jan, 2015 10:38 AM

 

Published : 23 Jan 2015 10:38 AM
Last Updated : 23 Jan 2015 10:38 AM

வெளிநாடுகளில் பதுக்கிய பணம்: இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியை நாடுகிறது இலங்கை

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின்போது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடியை மீட்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளின் உதவியை நாட அந்நாட்டு புதிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அமைச் சரவை செய்தித் தொடர்பாளரும் சுகாதார அமைச்சருமான ரஜிதா சேனரத்னே நேற்று கூறியதாவது:

முந்தைய ஆட்சியின்போது உயர் பதவியில் இருந்தவர்கள் பல ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. பங்குச் சந்தை, சொத்து பரிமாற் றம் ஆகியவற்றிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனைப்படி, ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடு மற்றும் ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அதிகாரம் மிக்க அமைச்சரவைக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கண்டுபிடிக்க ஆர்பிஐ நிதி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உதவி வருகின்றனர். ஆனால் இலங்கை அரசிடம் அத்தகைய நிபுணர்கள் இல்லை. எனவே, முந்தைய ஆட்சியாளர் களால் வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள பணத்தை மீட்க ஆர்பிஐ, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி ஆகியவற்றின் உதவியை கோர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ராஜபக்ச அரசில் முக்கிய பதவிகளை வகித்த 2 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இந்தக் குழு விரைவில் விசாரணை நடத்தும் என்றும் கூறப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்றது முதலே பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x