Last Updated : 16 May, 2016 10:02 AM

 

Published : 16 May 2016 10:02 AM
Last Updated : 16 May 2016 10:02 AM

ராணுவம் பற்றி பென்டகன் அறிக்கை: பரஸ்பரம் நம்பிக்கையை அமெரிக்கா சிதைத்துவிட்டது- சீனா கடும் கண்டனம்

“சீன ராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்பரம் நம்பிக்கையை சிதைத்துவிட்டது. சீன பாதுகாப்பு கொள்கைகள் பற்றி தவறான எண்ணத்தை உரு வாக்கி உள்ளது” என்று அமெரிக்கா வுக்கு சீனா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ராணுவம், பாது காப்பு வளர்ச்சி பற்றிய ஆண்டறிக் கையை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தயாரித்துள்ளது. அந்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “சீனா தனது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் படைகளை குவித்து வருகிறது. மேலும் சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் தனது ராணுவ முகாம்களை விரிவுப்படுத்தி வருகிறது. தென் சீன கடல் பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு ராணுவ தளவாடங்களை குவிப்பதன் மூலம் மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்மூலம் தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. சீன ராணுவ கொள்கையில் வெளிப்படைதன்மை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு சீனா அரசு நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யூஜுன் கூறியதாவது:

சீனா - அமெரிக்காவின் பரஸ்பர நம்பிக்கையை அமெரிக்கா சிதைத்து விட்டது. சீனாவின் ராணுவ கொள்கைகளை திரித்து கூறி மதிப்பிழக்க செய்துள்ளது. பென்டகனின் அறிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இரு நாட்டு உறவு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்பட செய்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்பு துறை கொள்கைகள்தான் சந்தேகத்துக்கிடமாகவே உள்ளன. அமெரிக்காதான் சீன கடல் பகுதிக்கு அத்துமீறி போர் விமானங்களையும் போர்க் கப்பல்களையும் அனுப்பி வருகிறது.

தென் சீன கடல் பகுதியில் நான்ஷா தீவுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சீனா உருவாக்கி வருகிறது.

இவ்வாறு சீன செய்தித் தொடர்பாளர் யாங் யூஜுன் கூறினார்.

தென் சீன கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் போன்ற நாடு கள் உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x