Published : 09 Jan 2015 07:14 PM
Last Updated : 09 Jan 2015 07:14 PM

ராஜபக்சவின் 10 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது: இலங்கை புதிய அதிபராக சிறிசேனா பதவியேற்பு - ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார்

இலங்கை அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேனா (63) நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அதே விழாவில் நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிபர் தேர்தலில் தோல்வி யைத் தழுவிய ராஜபக்ச (69) தனது குடும்பத்தினருடன் அலரி (அதிபர்) மாளிகையில் இருந்து வெளியேறினார். அவரது 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

அமோக வெற்றி

இலங்கை அதிபர் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட் டனர். இதில் ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட் பாளர் மைத்ரிபால சிறிசேனா வுடன் இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதம் பேர் வாக்குகளை பதிவு செய்தனர்.

அன்றிரவு 8 மணி முதல் வாக்கு களை எண்ணும் பணி தொடங்கியது. விடிய விடிய நடைபெற்ற இப்பணி நேற்று காலை நிறைவடைந்தது. தலைமை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப் பிரிய அதிகாரபூர்வமாக முடிவுகளை வெளியிட்டார்.

அதன்படி எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா 51.28 சதவீத வாக்கு களைப் பெற்று வெற்றிவாகை சூடினார். அவருக்கு ஆதரவாக 62 லட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகள் கிடைத்தன.

ராஜபட்சவுக்கு ஆதரவாக 47.58 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அவருக்கு 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகள் கிடைத்தன.

வேண்டுகோள்

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நிருபர்களிடம் சிறிசேனா பேசியதாவது: யார் மனமும் புண்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். தேர்தல் வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டும்.

நான் 6 ஆண்டுகள் மட்டுமே அதிபராக பதவி வகிப்பேன். இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.

விடைபெற்றார் ராஜபக்ச

அதிபரின் அதிகாரபூர்வ இல்ல மான அலரி மாளிகையில் மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகளிடம் இருந்து ராஜபக்ச நேற்று விடை பெற்றார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் நலன் கருதி சிறிசேனாவின் நல்ல திட்டங்களுக்கு நிச்சயமாக ஆதரவு அளிப்பேன், இலங்கை சுதந்திர கட்சியின் தலைவராக இருந்து தொடர்ந்து கட்சிப் பணியாற்று வேன் என்று தெரிவித்தார்.

பதவியேற்பு

இதைத் தொடர்ந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் புதிய அதிபர் பதவியேற்பு விழா நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

இலங்கை மரபின்படி அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி புதிய அதிபருக்கு பதவிப் பிரமாணம் செய்வது வழக்கம். ஆனால் தற்போதைய தலைமை நீதிபதி மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க மாட்டேன் என்று சிறிசேனா திட்ட வட்டமாக அறிவித்திருந்தால் தலைமை நீதிபதி விழாவில் பங்கேற்கவில்லை.

நீதிபதி ஸ்ரீபாலன் முன்னிலை யில் நாட்டின் புதிய அதிபராக சிறிசேனா பதவியேற்றுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் பேசிய சிறிசேனா, ஜனநாயகத்தை உறுதி செய்யும் வகையில் அதிபர் மாளிகையில் இருந்து வெளி யேறிய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உள்நாட்டுப் போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகியும் தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் ராணு வத்தின் வசம் உள்ளது. புதிய அதிபர் மைத்ரியும் பிரதமர் ரணிலும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணில் குடியமர்த்த வேண்டும்.

தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயகம் மலர வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பான விரிவான செய்தி - > ராஜபக்ச தோல்வி: இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின், நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா. | படம்: மீரா ஸ்ரீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x