Last Updated : 09 Jan, 2015 10:42 AM

 

Published : 09 Jan 2015 10:42 AM
Last Updated : 09 Jan 2015 10:42 AM

மிரட்டல்களைச் சமாளித்த சார்லி ஹெப்டோ

சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையான சார்லி ஹெப்டோ மிரட்டல்களைச் சந்திப்பது முதல்முறை அல்ல. மதம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தன்னுடைய அங்கத வெளிப்பாட்டிற்காகப் பல முறை மிரட்டல்களைச் சந்தித்துள்ளது.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் நபிகள் நாயகத்தை சிறப்பு ஆசிரியர் என்று கூறி சரியா ஹெப்டோ எனும் பத்திரிகையைக் கொண்டு வந்தது. அதைக் கண்டித்து அந்த அலுவலகத்தின் மீது பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த அலுவலகம் சாம்பலானது. அந்தப் பத்திரி கையின் இணையதளம் முடக்கப் பட்டது. அதில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கொலை மிரட்டல்களும் வந்தன.

ஆனால் ஆறு நாட்கள் கழித்து தன்னுடைய முதல் பக்கத்தில் தனது கேலிச் சித்திரக்காரர்களில் ஒருவர், முஸ்லிம் ஆண் ஒருவரைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல கார்ட்டூன் வெளியிட்டது. அந்தப் படத்திற்கு, 'வெறுப்பைக் காட்டிலும் அன்பு மிக வலிமையானது' என்று தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இத்துடன் நிற்கவில்லை. மேலும் மேலும் நபிகள் நாயகம் குறித்து பல்வேறு கேலிச் சித்திரங்களை வெளியிட்டவாறே இருந்தது அந்தப் பத்திரிகை. பத்திரிகையின் இந்தப் போக்கைப் பார்த்து, 'இனி பத்திரிகையை வெளியிட வேண்டாம்' என்று பிரெஞ்சு அரசாங்கம் அவரைக் கேட்டுக் கொண்டது. ஆனால் பத்திரிகை தொடர்ந்து வெளியிடப்பட்டதால், 'எங்கே தன் மீது தாக்குதல் நடத்தப்படுமோ' என்று அஞ்சி, சிறிது காலத்துக்கு 20 நாடுகளில் உள்ள தன்னுடைய தூதரகங்கள், கலாச்சார மையங்கள் போன்றவற்றை பிரெஞ்சு அரசு மூடியது.

இதுகுறித்து அப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான ஜெரார்ட் பியார்ட் கூறும்போது, "நாங்கள் பிரெஞ்சு சட்டத்தின் படி நடக்கிறோம். மற்ற நாடுகளில் உள்ள சட்டங்கள் குறித்து எங்களுக்குக் கவலையில்லை" என்றார். இந்தப் பத்திரிகையின் வரலாற்றைப் பார்க்கும்போது, சமூகத்தில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் பொதுவெளியில் விலக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கிண்டல் தொனிக்க கருத்துகளை வெளியிடத் தயாராக இருந்து வந்திருப்பது தெரிகிறது.

1960-ம் ஆண்டில் ‘ஹரா கிரி ஹெப்டோ' எனும் பெயரில் வெளியான இந்தப் பத்திரிகை பிரான்ஸ் முன்னாள் அதிபர் சார்லஸ் த கல்லின் மரணத்தை கேலி செய்தது. அதைத் தொடர்ந்து இந்தப் பத்திரிகை தடை செய்யப்பட்டது. அதன் பிறகு ‘சார்லி ஹெப்டோ' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

அடுத்த வாரம் மீண்டும் வெளியாகிறது

தங்கள் அலுவலகம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி ஆசிரியர் உட்பட பலரை இழந்துள்ள நிலையில் பத்திரிகையின் அடுத்த பதிப்பு வரும் புதன்கிழமை வழக்கம்போல வெளியாகும் என்று சார்லி ஹெப்டோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த வார பத்திரிகையின் கட்டுரையாளர் பேட்ரிக் பெல்லோக்ஸ் கூறியது: முட்டாள்தனம் ஒருபோதும் வெல்லாது என்பதை நிரூபிக்கும் வகையில் பத்திரிகையின் அடுத்த இதழை வழக்கம்போல வெளியிட முடிவு செய்துள்ளோம். எங்கள் சக ஊழியர்கள் பலரை இழந்து மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். எனினும் எங்களை முடக்கிக் கொள்ள மாட்டோம். இது தொடர்பாக பத்திரிகை ஊழியர்களின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x