Published : 18 Jan 2017 10:17 AM
Last Updated : 18 Jan 2017 10:17 AM

மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்து 180 அகதிகள் பலி

மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்து 180 அகதிகள் பலியாகி யுள்ளனர். 4 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, இராக், லிபியா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தோர் ஆபத்தான கடல் பயணம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அகதிகளுக்கான கதவை அடைத்துவிட்டன. எனினும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் இப்போதும் படகுகள் மூலம் இத்தாலி, கிரீஸ் நாடுகளில் கரையேறி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை லிபியா கடற்கரை பகுதியில் இருந்து 180-க்கும் மேற்பட்ட அகதிகள் பெரிய படகு மூலம் இத்தாலியை நோக்கி புறப்பட்டனர். 5 மணி நேர கடல் பயணத்துக்குப் பிறகு படகின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்தது.

அதிக பாரம் காரணமாக படகில் தண்ணீர் புகுந்து மூழ்கத் தொடங்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். அந்த வழியாக வந்த பிரான்ஸ் படகு ஒன்று ஒரு பெண் உட்பட 4 பேரை மட்டும் மீட்டது. பின்னர் அவர்கள் நார்வே கடலோர காவல் ரோந்து கப்பல் அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த கப்பல் மூலம் 4 பேரும் நேற்று இத்தாலியின் டிராபானி நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் நிருபர்களிடம் கூறிய போது, நாங்கள் கிழக்கு ஆப்பிரிக் காவின் எத்தியோப்பியா, எரித்திரியா நாட்டைச் சேர்ந்தவர் கள். எங்களோடு வந்த 180-க்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் மூழ்கிவிட்டனர். அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் மட்டும் படகு விபத்துகளில் சுமார் 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட அகதிகள் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இத்தாலி கடற்கரை நகரங்களுக்கு 1,81,000 அகதிகள் வந்தனர். இந்த ஜனவரியில் இதுவரை 2300-க்கும் மேற்பட்ட அகதிகள் தஞ்சம் அடைந்திருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அகதிகளைக் கரைக்கு அழைத்து வந்த நார்வே நாட்டின் ரோந்து கப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x