Last Updated : 09 Jul, 2017 04:15 PM

 

Published : 09 Jul 2017 04:15 PM
Last Updated : 09 Jul 2017 04:15 PM

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாக். பெண்: இந்தியாவில் சிகிச்சை பெற அமைச்சர் சுஷ்மாவுக்கு வேண்டுகோள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண், இந்தியாவில் சிகிச்சை பெற உதவும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஃபய்சா தன்வீர் (25). இவர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ‘இந்திரபிரஸ்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்’ சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். இதற்காக முன்பணமாக ரூ.10 லட்சத்தையும் மருத்துவமனையில் செலுத்தி உள்ளார். இந்தியா செல்வதற்காக மருத்துவ விசா கேட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபகாலமாக எல்லையில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால், ஃபய்சா தன்வீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அவரது தாய் கூறியுள்ளார். இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் ட்விட்டரில் உதவி கேட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களாக சுஷ்மாவிடம் உதவி கேட்டு ஃபய்சா தன்வீர் ட்விட்டரில் பல முறை தகவல் அனுப்பி உள்ளார். அதில், ‘‘தயவுசெய்து எனக்கு உதவுங்கள், என்னுடைய உயிரைக் காப்பாற்றுங்கள் மேடம்’’ என்றும், ‘‘சுஷ்மாஜி தயவுசெய்து உதவி செய்யுங்கள்’’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ட்விட்டரில் ஃபய்சா தன்வீர் தனது புகைப்படத்தையும், வாயில் ஏற்பட்டுள்ள புற்றுநோயை காட்டும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவனுக்கு இருதயச் சிகிச்சைக்காக உதவும்படி அவனது குடும்பத்தினர் சுஷ்மாவுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்பின் சுஷ்மா உத்தரவின்படி சிறுவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x