Published : 09 Jan 2015 04:35 PM
Last Updated : 09 Jan 2015 04:35 PM

பாரீஸில் 2 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 பேர் சுட்டுக் கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள தொழிற்சாலை மற்றும் சந்தை ஆகியவற்றில் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த இரு தாக்குதல்களிலும் பொதுமக்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கடந்த புதன்கிழமை பாரீஸிலுள்ள சார்லி ஹெப்டோ என்ற வார இதழ் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஒரு காவலர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலை செரீப் கவுச்சி, சையத் கவுச்சி என்ற இரு சகோதரர்கள் மேற்கொண்டதாகத் தெரியவந்தது.

இந்நிலையில், பாரீஸின் வடகிழக்குப் பகுதியான டாம்மார்டின் ஆன் கோய்லே பகுதியில் தீவிரவாதிகள் இருவரும் காரில் தப்பிச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் காரில் விரட்டினர். அப்போது, பொதுமக்களில் ஒருவரை பணயக் கைதியாக தீவிரவாதிகள் பிடித்து காரில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள், டாம்மார்டின் ஆன் கோய்லே புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்து விட்டனர். அவர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

காரில் தப்பிச் சென்றபோது தீவிர வாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். காவல் துறையினரும் துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர். தொழிற் சாலையை ஆயுதம் ஏந்திய வீரர்கள் சுற்றி வளைத்துள்ள நிலையில் 5 ஹெலிகாப் டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளின் பிடியில் ஒரு பணயக் கைதி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் யார், மொத்தம் எத்தனை பணயக் கைதிகள் இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பாரீஸ் நகரில் உள்ள கொஷர் சந்தைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. கடந்த வியாழக்கிழமை பெண் காவலர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற அதே தீவிரவாதிதான் இந்த சந்தைப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்தைப் பகுதியில் ஐந்து பேர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x