Last Updated : 14 Aug, 2015 09:39 AM

 

Published : 14 Aug 2015 09:39 AM
Last Updated : 14 Aug 2015 09:39 AM

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 5

கிழக்கு பாகிஸ்தான் சமத்துவமாக நடத்தப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. 1945 - 1948 தொடங்கி 1960 வரை அந்தப் பகுதியில் ஏற்றுமதி வருமானம் 70 சதவீதம் என்று இருந்தது. ஆனால் இதிலிருந்து 25 சதவீதம் மட்டுமே அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டது.

1948-ல் கிழக்கு பாகிஸ்தானில் 11 நெசவு மில்கள் இருந்தன. மேற்கு பாகிஸ்தானில் வெறும் ஒன்பதுதான். ஆனால் 1971-ல் மேற்கு பாகிஸ்தானில் 150 நெசவு மில்கள் என்று அதிகரித்திருக்க கிழக்கு பாகிஸ்தானில் நெசவு மில்களின் எண்ணிக்கை வெறும் 26 ஆனது.

மேலே உள்ள உதாரணங்களில் 1948 என்ற வருடத்தை அடிப்படையாகக் கொள்ளக் காரணம் அது பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்ற காலகட்டம் என்பதால்தான்.

ஆக கிழக்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதி மேற்கு பாகிஸ்தானின் வளர்ச்சிக்குப் பயன்பட்டது. தவிர தங்கள் வருமானத்தில் கணிசமான பங்கு காஷ்மீர் தொடர்பாக நடைபெற்று வந்த பல்வேறு போர்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறதே தவிர தங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்கிற ஆதங்கமும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டிருந்தது.

மதமும் கூட இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்றால் அது பலருக்கு வியப்பளிக்கலாம். இரண்டு பகுதிகளுமே முஸ்லிம்கள் நிறைந்தவைதானே. சொல்லப் போனால் முஸ்லிம்களுக்குத் தனிநாடு வேண்டும் என்றுதானே பாகிஸ்தான் உரு வானது? அப்படியிருக்க அதன் இருபகுதி களுக்கிடையே தோன்றிய வேறுபாடுகளுக்கு மதம் எப்படி காரணமாக இருக்க முடியும்? நியாயமான கேள்விகள்தான். ஆனால் விடைகள் உண்டு.

மேற்கு பாகிஸ்தான் பகுதி மக்களில் 97 சதவீதம் முஸ்லிம்கள். இவர்கள் மற்ற எதையும்விட மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர்கள். கிழக்கு பாகிஸ்தானில் 85 சதவீதம் முஸ்லிம்கள். மீதம் 15 சதவீதத்தில் பலரும் இந்துக்கள். (மக்கள் தொகை அதிகம் நிறைந்த பகுதி கிழக்கு பாகிஸ்தான் எனும் கோணத்தில் பார்த்தால் இந்த 15 சதவீதம் என்பது எண்ணிக்கையில் அதிகம்தான்). எனவே அங்கு மத சகிப்புத்தன்மை கொஞ்சம் அதிகம். (பின்னாளில் அங்கிருந்து லஜ்ஜா எனும் நூலை எழுதிய தஸ்லீமா நஸ்ரின் ஓட ஓட விரட்டப்பட்டது வேறு விஷயம்).

வங்காளிகள் தங்கள் இலக்கியம் மற்றும் கலாச்சார தொன்மத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். (இந்த மதச்சார்பற்ற தன்மை பிறகுகூட வெளிப்பட்டது. வங்கதேசம் உருவானபோது அதற்கு ’வங்கதேசம் மக்கள் குடியரசு’ என்றுதான் பெயரிடப்பட்டது. ‘வங்கதேசம் இஸ்லாமியக் குடியரசு’ அல்ல).

இதன் தொடர்ச்சியாகத்தான் உருது மட்டுமே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று ஜின்னா அறிவித்தபோது கிழக்கு பாகிஸ்தானில் அதற்கு கடும் எதிர்ப்பு உண்டானது. காரணம் அங்கு வசித்த பலரும் (பல முஸ்லிம்கள் உள்பட) வங்க மொழியைத்தான் பேச்சு மொழியாகக் கொண்டிருந்தனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ‘மேற்கு பாகிஸ்தானில் ஓர் இடத்தைக்கூட வெல்ல முடியாத அவாமி லீக் எப்படி பாகிஸ்தானை ஆளலாம்?’ என்று மேற்கு பாகிஸ்தானில் சில அரசியல்வாதிகள் கேட்க, கிழக்கு பாகிஸ்தானில் உக்கிரம் அதிகமானது.

கிழக்கு பாகிஸ்தானியர்களால் உருவாகும் ஓர் அரசை ஏற்றுக் கொள்வதற்கு மேற்கு பாகிஸ்தானியர்களுக்கு மனமே இல்லை. அந்தச் சமயத்தில் புட்டோ கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அரசியல் சட்டத்தையே மீறும் வகையில் அவர் பேசத் தொடங்கினார். ‘உதர் தும், இதர் ஹம்’ என்றார். ‘அங்கே நீங்கள் ஆட்சி அமையுங்கள், இங்கே நாங்கள் ஆட்சி அமைத்துக் கொள்கிறோம்’’ என்றார். அதாவது மறைமுகமாக பிரிவினை குறித்து பேசினார். பிறகு விளக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு இரண்டு பிரதமர்கள் இருக்கலாம் என்றார். தவிர முஜிபுர் ரஹ்மானின் ஆறு அம்ச திட்டம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றார். (இந்த திட்டம் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்) இதனால் கிழக்கு பாகிஸ்தானுக்கு சுயாட்சி அந்தஸ்து உண்டாகிவிடும் என்றார் அவர்.

பிரிவினை எண்ணங்கள் கிழக்கு பாகிஸ்தானிலும் கரைபுரண்டு ஓடத் தொடங்கின. தனி நாடாக உருவானால்தான் பொருளாதார வாய்ப்புகளும், சமூக வளர்ச்சியும் தங்களுக்கு இருக்குமென்று அவர்கள் தீவிரமாகவே நினைக்கத் தொடங்கினார்கள். முக்கியமாக மேற்கு பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

இந்தச் சூழலில் மேற்கு பாகிஸ்தானில் இருந்த சில கல்வியாளர்கள் கிழக்கு பாகிஸ்தானை ஆதரித்தார்கள். ஆனால் அவர்கள் அடக்கப்பட்டார்கள். புட்டோவை அரசியலில் வளர்த்தவர் என்று கூறப்பட்ட ஜலாலுதீன் அப்துர் ரஹீம் என்பவர் நியாயத்தைப் பேசியதற்காக புட்டோவால் சிறையில் அடைக்கப்பட்டார்.

கவிஞர் அகமது பயஸ், மனித உரிமைப் போராளி மாலிக் குலாம் ஜிலானி, சிந்தி தேசியக் கட்சித் தலைவர் சையது ஆகியோர் நாட்டின் ஆட்சி (தேர்தல் முடிவுகளின்படி) அவாமி லீக்கிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே குரல் கொடுத்தனர்.

1970ல் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் கட்சிக்குப் பெரும் வெற்றியை அளித்தனர் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் என்றோம். எந்த அளவுக்கு தெரியுமா? கிழக்கு பாகிஸ்தானுக்காக 169 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றில் 167 தொகுதிகளைக் கைப்பற்றியது அவாமி லீக். உலகின் மொத்தப் பார்வையும் அவாமி லீக் மீதும் அதன் தலைவர் முஜிபுர் ரஹ்மான் மீதும் திரும்பின.

‘யார் இந்த முஜிபுர் ரஹ்மான்?’ பலரும் கேட்கத் தொடங்கினார்கள்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x