Last Updated : 06 Oct, 2016 04:18 PM

 

Published : 06 Oct 2016 04:18 PM
Last Updated : 06 Oct 2016 04:18 PM

தீவிரவாதிகளைக் காக்காதீர்கள்: பாக். ராணுவத்துக்கு நவாஸ் எச்சரிக்கை

சர்வதேச நாடுகளின் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தன் நாட்டு ராணுவத்திற்கு ‘தீவிரவாதிகளை பாதுகாக்க வேண்டாம்” என்று எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகளையும் ஆலோசித்ததாகவும், பதான்கோட் தாக்குதல் மற்றும் 2008 மும்பை தாக்குதல் விசாரணைகளை விரைவில் முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முன்னணி பாகிஸ்தான் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ராணுவ மற்றும் குடிமைச் சமூகத் தலைவர்களிடையே தொடர் சந்திப்புகள் நடைபெற்றதையடுத்து ஷெரிப்பின் இந்த உத்தரவுகள் வெளியானதாக டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.

அதாவது பாகிஸ்தான் அரசு ராணுவத் தலைமைக்கு ‘இதுவரை இல்லாத முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளது’ என்று டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவில் முக்கிய நடவடிக்கைகளில் கருத்தொற்றுமை கோரிய பிரதமர் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கும் வலியுறுத்தியதாக அந்த நாளிதழ் செய்தி தெரிவித்துள்ளது.

திங்களன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்ததையடுத்து இரண்டு விதமான நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதில் வெளியிடப்படாத ரகசிய நடவடிக்கை ஒன்றும் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் ரிஸ்வான் அக்தர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜஞ்ஜுவா ஆகியோர் அனைத்து மாகாணங்களுக்கும் செல்லவிருப்பதாகவும் அங்கு தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக சட்ட அமலாக்க குழுவினர் எடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவத் தலைமை புலனாய்வுக் கழகங்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதை இருவரும் வலியுறுத்தவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் பதான்கோட் தாக்குதல் விசாரணையையும், ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிறுத்தப்பட்ட மும்பை தாக்குதல் விசாரணைகளையும் விரைவில் முடிக்குமாறும் ஷெரிப் அறிவுறுத்தியதாக அந்தச் செய்தி அறிக்கை கூறுகிறது.

பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீப் மற்றும் ஐஎஸ்ஐ டி.ஜி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட அசாதாரணமான மோதலைத் தொடர்ந்து இந்த புதிய அணுகுமுறையை நவாஸ் ஷெரிப் மேற்கொண்டுள்ள்தாக அந்த நாளிதழ் கூறுகிறது.

மேலும் திங்களன்று பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் ஐஜாஜ் சவுத்ரி பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

அதாவது, தீவிரவாதப் பிரச்சினையினால் பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்தும் நிலையை எதிர்கொள்வதாகவும், இது தொடர்பாக பாகிஸ்தான் கருத்துகள் உலகநாடுகள் மத்தியில் பெரிய தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்றும் ஐஜாஜ் சவுத்ரி கூறியதாக இந்த நாளிதழ் கூறுகிறது.

மேலும் ஹக்கானி குழுக்களுக்கு எதிராக நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மேலும் பாகிஸ்தான், அமெரிக்க உறவுகள் பாதிப்படையவே வாய்ப்பிருப்பதாக அவர் பிரதமரிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவைக் குறிப்பிட்டு சவுத்ரி பிரதமர் நவாஸிடம் குறிப்பிட்டதாக வந்த செய்திகளின் படி, பதான்கோட் விசாரணையை துரிதப்படுத்தி, ஜைஷ்-இ-மொகமது அமைப்பிற்கு எதிராக கண்ணுக்கு புலப்படும் நடவடிக்கையை எடுப்பதன் தேவையிருப்பதையும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

மேலும் சீனா தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பாகிஸ்தான் தன் பாதையை மாற்ற வேண்டும் என்பதை சீனாவும் சுட்டிக்காட்டியதாக அவர் நவாஸ் ஷெரிப்பிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜைஷ்-இ-மொகமது தலைவர் மசூத் அசார் மீதான ஐநா தடையை சீனா நிறுத்தி வைத்திருந்தாலும் ஆனால் அப்படி செய்வதன் தர்க்கம் பற்றியும் பாகிஸ்தானிடம் கேள்வி எழுப்பியதாக வெளியுறவுச் செயலர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளியுறவுச் செயலரின் இந்த எதிர்பாராத முடிவுகளினால் பாகிஸ்தான் ஆட்சியதிகார அதிகாரிகளுக்கும் ஐஎஸ்ஐ டி.ஜி.க்கும் இடையே இதுவரையில்லாத அளவுக்கு அடிப்படைகளையே மாற்றும் பேச்சுப் பரிவர்த்தனைகள் நடந்ததாக நாளிதழ் செய்தி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x