Published : 18 Jan 2017 09:32 PM
Last Updated : 18 Jan 2017 09:32 PM

சீனாவுடன் பகைமை பாராட்டுவது பேராபத்து: ட்ரம்புக்கு ஒபாமா நிர்வாகம் எச்சரிக்கை

சீனாவுடன் பகைமை பாராட்டினால் அது ஆபத்தில் போய் முடியும் என்று வெளியேறும் ஒபாமா நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிபர் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக அதிபர் ட்ரம்ப் ‘ஒரே சீனா’ என்ற கொள்கையை மீண்டும் கிளப்புவது அபாயகரமானது என்று ஒபாமா நிர்வாகம் எச்சரித்துள்ளது. சீனாவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பல்வேறு விவகாரங்களை மீண்டும் திறப்பதினால் அமெரிக்கா சாதிக்கப்போவது ஒன்றுமில்லை மாறாக அது ஆபத்தில்தான் போய் முடியும் என்று ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒபாமா நிர்வாகத்தில் இருந்த உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறும்போது, “சீனா எந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் வராது. ஆகவே ஒரே சீனா போன்ற ஆபத்தான கொள்கைகளை மீண்டும் திறப்பதினால் அமெரிக்காவுக்கு எந்தப் பயனும் இல்லை. உலகிலேயே அமெரிக்கா - சீனா இடையே மிக முக்கியமான இருதரப்பு உறவுகள் இருந்து வருகின்றன.” என்றார்.

மேலும், “நமது மிக முக்கியமான அயல்நாட்டுக் கொள்கைகளில் பெரும்பாலானவை அமெரிக்க-சீன கூட்டுறவினால் சாதிக்கப்பட்டதே. உதாரணமாக பாரீஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தம், ஈரான் அணு ஒப்பந்தம், 2009-ல் உலகப் பொருளாதார நெருக்கடியை நிர்வகித்தது என்று சீனாவுடனான உறவின் மூலம் சாதித்ததே.

எனவே சீனாவுடன் சுமுகமான உறவுகளை வைத்து கொள்வதன் மூலம் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன, அதைவிடுத்து சீனாவை எதிரியாக பாவித்தால் அது அனைவருக்கும் மிக ஆபத்தாக முடியும், உலகம் முழுதுக்குமே அது ஆபத்து, ஆம் வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் சீனாவை எதிரியாக பாவித்து செயல்பட்டால் அது உலகிற்கே ஆபத்து.

எனவே சீனக் கொள்கையில் ஏதாவது தாறுமாறாக நடந்து கொண்டால் அமெரிக்கா தன் காலிலேயே சுட்டுக் கொள்வதற்குச் சமம்.

அதேபோல் டிரான்ஸ் பசிபிக் கூட்டணியிலிருந்து ட்ரம்ப் கூறுவது போல் அமெரிக்கா வெளியேறினால் அது சீனாவைத்தான் மேலும் வலுப்படுத்தும்” என்று அவர் எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x