Last Updated : 06 Jan, 2015 10:56 AM

 

Published : 06 Jan 2015 10:56 AM
Last Updated : 06 Jan 2015 10:56 AM

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 5

சிங்கப்பூர் தனி நாடான பிறகு 1969-ல் ஒருமுறை இனக்கலவரம் நடைபெற்றது. ஆனால் இதன் தொடக்கம் உண்மையில் சிங்கப்பூரில் நடக்கவில்லை. மலேசியா நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் எதிரொலிதான் இது.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மற்றும் பெடலின் ஜெயா ஆகிய பகுதிகளில் தொடங்கியது அந்தக் கலவரம். பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மலேசியாவில் வசித்த சீனர்களுக்கும் மலாய் மக்களுக்குமிடையே கலவரம் உண்டானது. இதில் 196 பேர் இறந்தனர். அவசர நிலைச் சட்டத்தை அவசரமாக அறிமுகப்படுத்தியது மலேசிய அரசு. 1971 வரை பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது.

இதெல்லாம் நடந்தது மலேசியாவில்தான். ஆனால் சிங்கப்பூரிலும் சீனர்களும், மலேய மக்களும் அதிகம் இருந்ததால் அந்தக் கலவரத்தின் தாக்கம் சிங்கப்பூரிலும் வெடித்தது. ஏற்கனவே மலாய் மக்களின் தேசியக் கூட்டமைப்பு (UMNO), ‘’சிங்கப்பூரில் மலாய் இன மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். நாங்களே மண்ணின் மைந்தர்கள்’’ என்று அறிவித்திருந்தார்கள்.

சிங்கப்பூரில் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த சீனர்களுக்கு இது வெறுப்பைத் தந்தது. ஆனால் சிங்கப்பூரில் வசித்த மலாய் மக்களுக்கோ ‘’தாங்களே பூமி புத்திரர்கள். எனினும் தங்களது இனம் பொருளாதாரத்தில் மேம்படவில்லை’’ என்ற வருத்தம் ஆழமாகவே இருந்தது. மலேசியாவில் மலாய் இன மக்கள் சீனர்கள்மீது பல கொடுமைகளைப் புரிகிறார்கள் என்ற தகவல் சிங்கப்பூரில் பரவியது. சிங்கப்பூரின் டென்ஷன் அதிகமானது.

சிங்கப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன. காவல் துறை வேகமாகச் செயல்பட்டது. ஆனால் இந்தக் கலவரத்தில் 36 பேர் இறந்தனர். 500 பேருக்கு பலத்த காயங்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரத்தில் இந்தியர்கள் – குறிப்பாக தமிழர்கள் – பங்கு கொண்டனர்.

1819 காலகட்டத்தில் மலாய் மக்களைவிட இந்தியர்களின் மக்கள் தொகை சிங்கப்பூரில் அதிகமானது. அப்போது அந்த நாட்டில் வசித்த இரண்டாவது பெரும் இனம் என இந்தியர்கள் ஆயினர். 1860ல் மக்கள் தொகையில் 16 சதவிகிதம் இந்தியர்கள்தான். பின்னர் படிப்படியாகக் குறைந்து 1980ல் இது வெறும் 6.4 சதவிகிதம் என்று ஆனது. இதற்குப் பலகாரணங்கள்.

1970க்களில் பிரிட்டிஷ் ராணுவம் இங்கிருந்து பின்வாங்கியது. இதன் காரணமாக அதில் பணியாற்றிக் கொண்டிருந்த பல இந்திய சிப்பாய்கள் வெளியேறினர். தவிர வேலை தேடி சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தங்கள் முதிய பருவத்தில் இந்தியாவிலுள்ள தங்கள் குடும்பத்துக்குத் திரும்பினர். 1965-ல் சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்திய கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்தியர்களின் கொத்து கொத்தான குடியேற்றம் முடிவுக்கு வந்தது. மேலும் சிங்கப்பூரில் வசித்த இந்தியர்களில் கணிசமானோர் மேலை நாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்தது.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் எண்பது சதவீதம் பேர் கல்வி அறிவு இல்லாதவர்கள். கூலி வேலை செய்பவர்கள். துறைமுகப்பணி, கட்டுமானப் பணி மற்றும் தனியார் கிடங்குகளில் பணிபுரிகிறார்கள்.

இந்தியர்கள் செரிவாக விளங்கும் சிங்கப்பூர் பகுதி ‘லிட்டில் இந்தியா’. இந்தப் பகுதி நாட்டில் சற்றுத் தள்ளி இருந்தாலும் சிங்கப்பூர் மெட்ரோ ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ரேஸ்கோர்ஸ் சாலைக்கும், செரங்கூன் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள லிட்டில் இந்தியா, சென்னை மாதிரியே காட்சியளிக்கிறது. குலோப்ஜான் கடை, மெஹந்தி கடை இவற்றுடன் பிரம்மாண்டமான முஸ்தஃபா பல்பொருள் அங்காடி 24 மணி நேரமும் திறந்துள்ளது.

கோமள விலாஸ், முருகன் இட்லி கடை, சரவண பவன், ஆனந்த பவன், அஞ்சப்பர் போன்ற தமிழகத்தின் பிரபல உணவகங்களை லிட்டில் இந்தியாவில் காணலாம்.

லிட்டில் இந்தியா பகுதி கொஞ்சம் நெருக்கமாகத்தான் இருக்கும். குறைவான வாடகையில் வீடு கிடைக்கும் என்பதால் நகரின் பிற பகுதிகளில் இருப்பவர்கள்கூட இங்கு தங்குவதுண்டு. இந்தியா, பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பகுதியில் தங்குகிறார்கள். 2013 டிசம்பர் 8 அன்று இந்தப் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு சிங்கப்பூர் அரசுக்கும், அந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்குமிடையே ஒரு பிளவை ஏற்படுத்தியது.

பேருந்து ஒன்றில் ஏறும்போது தமிழ்த் தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து சக்கரங்களில் மாட்டி உயிரிழந்தார். 33 வயதான சக்திவேல் என்ற இந்த இளைஞர் சிங்கப்பூரில் கட்டுமானப் பணி செய்து வந்தவர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 300 இந்தியத் தொழிலாளிகள் சாலைக் கலவரத்தில் ஈடுபட்டனர். பங்களாதேஷைச் சேர்ந்த தொழிலாளிகளும் இதற்கு ஆதரவு அளித்தனர்.

சிங்கப்பூர் அரசு ஒரு பெரும் போலீஸ் பட்டாளத்தை அங்கு அனுப்பியது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போதையில் இருந்தார்கள் என்றும், பீர் பாட்டில்களை தங்களை நோக்கி விசிறி எறிந்தார்கள் என்றும் காவல்துறை கூறியது. ஆம்புலன்ஸ் ஒன்றுக்குத் தீவைத்தனர் கலவரக்காரர்கள்.

27 பேரைக் கைது செய்தது காவல்துறை. அடுத்து வந்த நாட்களில் மேலும் 9 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர். 2014 பிப்ரவரி 10 அன்று வெளியான தீர்ப்பின்படி இவர்களில் ஒரு தொழிலாளிக்கு 15 வார சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கலவரங்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது அரசு. விபத்தில் பங்கு கொண்ட பேருந்தின் ஓட்டுனர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

‘’கலவரத்தில் ஈடுபட்ட அத்தனை பேரும் சட்டத்திற்கு முன் கொண்டுவரப் படுவார்கள்’’ என்ற அறிவித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங். சிங்கப்பூரில் வசித்த சீனர்கள் மற்றும், மலாய்காரர்கள் சிலர் ’’இந்தத் தமிழர்களே இப்படித்தான்’’ என்பது போன்ற விமர்சனங்களை உதிர்க்க, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசு ‘வெளிநாட்டிலிருந்து வந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் தொழிலாளிகளைப் பற்றிய எந்தவித விமர்சனமும் கூடாது’’ என்றது.

லிட்டில் இந்தியா பகுதியில் மது விற்பனைக்கும், மது அருந்துதலுக்கும் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை 2014 ஜூன் 24 வரை அந்தத் தடை அமலில் இருந்தது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x