Last Updated : 23 Jan, 2015 02:49 PM

 

Published : 23 Jan 2015 02:49 PM
Last Updated : 23 Jan 2015 02:49 PM

கிளர்ச்சியாளர்கள் பிடியில் ஏமன் அரசு: அதிபர் ஹதி ராஜினாமா

ஏமன் தலைநகர் சனாவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த நிலையில், ஏமன் அரசு முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிபர் மன்சூர் ஹதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஏமன் அதிபர் மன்சூர் ஹதியின் பதவி விலகல் கடிதத்தில், "நான் எதற்காக அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டேனோ, அதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அரசு முடக்கப்பட்டுவிட்டது. இனியும் நாட்டில் அமைதியான நிலையை ஏற்படுத்திவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை" என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதிபர் மன்சூர் ஹதியின் ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்க மறுத்துள்ளது. தற்போதைய நிலை குறித்து நாடாளுமன்ற அசாதாரண அமர்வை இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டி விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனின் தெற்குப் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்ட ராணுவப் படை, அதிபர் ராஜினாமா செய்ததாக வந்த செய்தியைத் தொடர்ந்து பின்வாங்கப்பட்டது. இதனால் ஏமனில் மோசமான அரசியல் சூழல் நிலவுகிறது.

ராணுவ நடவடிக்கை எடுக்கும்படியாக தலைநகரிலிருந்து உத்தரவு வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் சன்னிப் பிரிவு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர்களது ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து ஷியாப் பிரிவுக்கு ஆதரவான அல் - காய்தா மற்றும் அதன் சில கிளை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அரசை முடக்கும் நோக்கத்தோடு ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டு புதனன்று தலைநகர் சனாவை அடைந்தனர்.

தொடர்ந்து முன்னேறிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அதிபர் மன்சூர் ஹதியின் மாளிகையை முழுவதுமாக சிறைப்பிடித்து பாதுகாப்பு வீரர்களை விரட்டி தங்களது படை வீரர்களை நிறுத்தினர். இதனை அடுத்து ஏமன் நாட்டு அரசு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பட்டுக்கு முழுவதுமாக வந்தது.

இதனிடையே அதிபர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு மட்டுமே போடப்பட்டுள்ளது என்றும் இது அரசை முடக்கும் நடவடிக்கை இல்லை என்றும் ஹைத்தி கிளர்ச்சியாளர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

ஏமன் நாடு அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைமை செயல்ப்பாட்டு மையமாக இருந்து வருகிறது. இதனால் தங்களது நாட்டில் அல் - காய்தாவுக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு ஏமன் அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

தற்போது ஏமனில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி, "ஏமனில் வேகமாக ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

ஏமனில் ஏற்பட்டுள்ள நிலைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ - மூன் கவலைத் தெரிவித்துள்ளார். "ஏமன் நாட்டு மக்கள் அமைதியுடன் வாழ அதிகபட்ச கட்டுப்பாட்டு நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறேன்" என்று ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x