Last Updated : 01 Aug, 2015 10:52 AM

 

Published : 01 Aug 2015 10:52 AM
Last Updated : 01 Aug 2015 10:52 AM

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 14

கிரீஸ் நாட்டு மன்னரும் மற்றும் பலரும் தொடர்ந்து தங்கள் நாட்டிலேயே நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக்ஸ் நடைபெற வேண்டும் என்று விருப்பப்பட்டனர்.

ஆனால் நவீன ஒலிம்பிக்ஸுக்கு வித்திட்ட கூபெர்டின் உலகெங்கும் ஒலிம்பிக்ஸ் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். அதனால் 108 வருடங்களுக்குப் பிறகு 2004ல்தான் ஒலிம்பிக்ஸை நடத்தும் வாய்ப்பு கிரிஸுக்கு மீண்டும் கிடைத்தது.

உலக சாதனை எதுவும் முதல் நவீன ஒலிம்பிக்ஸில் முறியடிக்கப் படவில்லை. தலைசிறந்த போட்டியாளர்களில் சிலர் மட்டுமே ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டது ஒரு முக்கிய காரணம்.

அன்றைய வெற்றியாளர்களுக்குக் கிடைத்த பரிசுகள் கொஞ்சம் மாறுபட்டி ருந்தன. முதலிடத்தைப் பிடித்தவருக்கு வெள்ளிப் பதக்கம், ஒரு ஆலிவ் கிளை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்கு தாமிரப் பதக்கம் மற்றும் சான்றிதழ். மூன்றாவதாக வந்தவர்களுக்கு அறிவிப்போடு சரி, பதக்கம் கிடையாது. மராத்தான் பந்தயத்தை வென்ற ஸ்பிரிடோன் லூயிக்கு ஒரு சிறப்புக் கோப்பை வழங்கப்பட்டது.

முதல் ஒலிம்பிக்ஸ் முடிவுக்கு வந்ததாக மன்னர் அறிவிக்க, கிரேக்க நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட, மக்கள் உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.

கிரேக்கம் சுதந்திரம் பெற்றிருந்தது என்றாலும் அது பெயரளவில்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கிரேக்கப் பகுதிகள் ஒட்டாமன் துருக்கியர் வசம் இருந்தன. 1912ல் க்ரேடே மற்றும் தெற்கு மாசிடோனியா ஆகிய இதுபோன்ற பகுதிகளை கிரீஸ் மீண்டும் தன் வசம் கொண்டு வந்தது. இந்தப் போர் ‘‘பால்கன் யுத்தம்’’ என்று குறிப்பிடப்படுகிறது. ஏபிரஸ், வடக்கு ஏஜியன் தீவுகளும் கிரீஸ் வசம் மீண்டும் வந்தன.

1924ல் மன்னராட்சி வேண்டாம், குடியரசு தான் தேவை என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 1935லேயே மீண்டும் மன்னராட்சி உதயமானது. அதற்கு அடுத்த ஆண்டு மெடக்ஸாஸ் என்பவர் கிரீஸின் பிரதமர் ஆனார். இவர் வலதுசாரி கருத்துகள் கொண்டவர். சர்வாதிகாரியும்கூட.

கிரேக்கச் சரித்திரத்தின் அடுத்த கட்டமாக நாம் 1948-ஐ எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன் கிரேக்கத்தில் மன்னர் ஆட்சி முடிந்து, குடியரசு உண்டாகி, பின் மீண்டும் சர்வாதிகாரம் ஏற்பட்டது. ராணுவத் தலைவர் மெடக்ஷாஸ், ஒரு பிரதமரை நியமித்தார்.

இந்த நிலையில்தான் இரண்டாம் உலகப்போர் வந்தது. இத்தாலிய அதிபர் முசோலினி கிரீஸ் மீது படையெடுத்தார். இது பலருக்கும் வியப்பான ஒன்றாகவே இருந்தது. சொல்லப் போனால் முசோலினி கூட்டாளியான ஹிட்லருக்கேகூட இது அப்போது எதிர்பார்த்திராத ஒன்றுதான்.

‘‘முசோலினி செய்தது முட்டாள்தனம்’’ என்றார் ஹிட்லர். கிரீஸ் மீது கொண்ட கருணை யினால் அல்ல. போர்த் தந்திரம் என்ற கோணத் தில்தான் இந்தக் கருத்தை வெளிப்படுத் தினார். முசோலினி வடக்கு ஆப்பிரிக்காவில் தான் தன் கவனத்தைச் செலுத்தி இருக்க வேண்டும். எகிப்தை நோக்கித்தான் தன் படையை அனுப்பி இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.

என்றாலும் முசோலினி கிரீஸ்மீது படையெடுக்க வேண்டும் என்ற தனது தீர்மானத்திலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இத்தனைக்கும் அவரது ராணுவத் தலைவர்களே இதுகுறித்து எச்சரித்தார்கள். இதற்கு முக்கிய காரணம் கிரீஸ் ஒரு மலைப் பாங்கான பகுதி. அங்கு போரிடுதல் கஷ்டம். மலைப் பகுதியில் முன்னேறிவரும் எதிரணி வீரர்களை மேற்புறம் இருக்கும் உள்நாட்டு வீரர்களால் சுலபமாக வீழ்த்த முடியும். தவிர அப்போது மழைக் காலமாகவும் இருந்தால் போரிடுவது மிகவும் சிரமமாக இருக்கும். மேலும் கிரீஸ் ராணுவத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

இருந்தும்கூட முசோலினி மிகவும் தீர்மானமாக இருந்தார். கிரீஸை சில நாட்களிலேயே தங்கள் வசம் கொண்டு வந்துவிட முடியும் என்று நம்பினார். இதற்குக் காரணம் தன் ராணுவத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்பது மட்டுமே அல்ல. அதைவிட முக்கியமான வேறொரு காரணம் இருந்தது. அது அவர் தரப்பில் பிறருக்குத் தெரியாத ரகசியம் ஒன்று இருந்தது.

கிரீஸ் தரப்பில் சில கறுப்பு ஆடுகள் இருந்தார்கள். இவர்கள் ராணுவத்திலும் இருந்தார்கள், அரசியல்வாதிகளாகவும் இருந்தார்கள். இவர்களுக்கு எக்கச்சக்கமான பணத்தை ரகசியமாகக் கொடுத்திருந்தார் முசோலினி. இதற்கு பதிலாக இத்தாலி கிரீஸை ஆக்கிரமிக்கும்போது எதிர்த் தரப்பிலிருந்து எந்த ஒரு தடையும் வரக்கூடாது என்று கூறப்பட்டது!

ஆனால் இந்த கறுப்பு ஆடுகளையும் மீறி கிரேக்க ராணுவம் செயல்படும் என்பதை முசோலினி எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஒரே வாரத்தில் கிரீஸுக்குள் நுழைந்த இத்தாலிய ராணுவத்தினர் வெளியேற்றப்பட்டார்கள். சொல்லப் போனால் உயிர் பயத்தில் அவர்கள் பின்வாங்கி ஓடினார்கள் என்றே கூறலாம். அவ்வளவு வீரத்தைக் காட்டியது கிரீஸ். போதாக் குறைக்கு அந்தப் பகுதியின் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த இத்தாலியப் போர்க் கப்பல்கள் மீது பிரிட்டன் வேறு தாக்குதல் நடத்தியது.

மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மானியப் படைக்குக் கிடைத்த தொடர் வெற்றிபோல இத்தாலிக்கும் நிகழ வேண்டும் என்ற முசோலினி விருப்பம் நிறைவேறவில்லை. கிரீஸை இணைத்து இத்தாலியின் பரப்ப ளவை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவர் ஆசை நிராசை ஆனது. அல்பேனியாவை ஆக்கிரமித்ததன் அடுத்த கட்டமாக கிரீஸை ஆக்கிரமித்து விடலாம் என்ற அவர் எண்ணம் நிறைவேறவில்லை.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x