Last Updated : 23 May, 2015 11:07 AM

 

Published : 23 May 2015 11:07 AM
Last Updated : 23 May 2015 11:07 AM

கிடுகிடுத்த கியூபா - 4

ஆர்டொடாக்ஸோ கட்சியில் தன்னை இணைத்துக் கொண் டார் பிடல் காஸ்ட்ரோ. அதுவும் அந்தக் கட்சியின் தலைவராக இருந்த எடுவார்டோ சிபாஸ் என்பவரை பிடல் காஸ்ட்ரோவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.

இந்த இடத்தில் எடுவார்டோ சிபாஸ் குறித்து சில விஷயங்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் ஒரு போதும் கியூபாவின் ஆட்சித் தலைவர் ஆனதில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் (1940-ல் இருந்து அவர் மறைந்த 1951 வரை என்று வைத்துக் கொள்ளலாம்) அவர் கியூபாவின் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

கியூபாவின் மிகக் கவர்ச்சிகர மான வானொலி வர்ணனையா ளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் இவர். அப்போது அரசின் கொள்கைகளைப் பற்றி அழகாக விமர்சித்து பலரது மனங் களை மாற்றினார். முக்கிய மாக கியூபாவின் ஊழல் அரசியல் வாதிகளை பகிரங்கப்படுத்தினார்.

இறுதிவரை கறைபடாத கைகளுடன் வாழ்ந்தார். அவரது அரசியல் எதிரிகளின் சொத்து வகைதொகை இல்லாமல் ஏற, சிபாஸின் சொத்துகள் இறங்குமுகத்தில் இருந்தன. தன் அப்பாவால் கட்டப்பட்ட வீடுகளை விற்றுத்தான் 1948-க்கான அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். (பின்னர் 1933 புரட்சி, படிஸ்டாவுக்கெதிரான போராட்டம் என்று பல விதங்களில் இவரது பங்களிப்பு தொடர்ந்தது). இப்படி ஒரு பின்னணி கொண்ட சிபாஸினால் ஈர்க்கப்பட்டுதான் அவரது கட்சியில் சேர்ந்தார் பிடல் காஸ்ட்ரோ.

அந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ, தன் சக மாணவியான மிர்டா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தத்துவத்தை முக்கிய பாடமாக எடுத்துப் படித்துக் கொண்டிருந்தவர் மிர்டா. செல்வ வளம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னாளில் பிடல் காஸ்ட்ரோ கடுமையாக எதிர்த்த படிஸ்டாவோடு நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்பம் இது.

இந்தத் திருமணத்தினால் பிடல் காஸ்ட்ரோவுக்குச் செல்வச் செழிப்பான வாழ்க்கை கிடைத்தது. அரசியல் தொடர்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் ஆக முயன்றார் பிடல் காஸ்ட்ரோ.

1949-ல் அவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால் விரைவிலேயே பிடல் காஸ்ட்ரோவின் திருமண வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது 1948-ல் உருவான திருமண பந்தம் 1955-ல் முடிவடைந்து விட்டது. பிடல் காஸ்ட்ரோவுக்குப் போதிய வருமானம் இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். அவரின் மகன் அதன் பிறகு கியூபாவின் அரசியலில் பங்கு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் தொடர்ந்த வாழ்க்கை யில் நாடி நெவுயெல்டா மற்றும் மரியா லபோர்டு ஆகிய இரண்டு பெண்களுடனும் வெவ்வேறு காலகட்டங்களில் பிடல் காஸ்ட்ரோ வுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இந்த இரண்டு பெண்களுமே அவரின் சித்தாந்தங்களால் கவரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரின் மூலம் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆனார்.

என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் அதிகாரபூர்வ மனைவி (பின்னர் விவாகரத்து செய்து கொண்ட) மிர்டாதான். இவர்களது மகன் டயஸ் பலார்ட் (Diaz Balart) அறிவியலில் சிறந்து விளங்கினார். கியூபாவில் உள்ள ஜுராபுவா என்ற இடத்தில் உருவாகி இருக்கும் அணுசக்தி ஆராய்ச்சி மையம் இவரது மேற்பார்வையில்தான் உருவானது. தொடக்கத்தில் சோவியத் யூனியனின் உதவி இதற்குக் கிடைத்தது. ஆனால் ஒருகட்டத்தில் சோவியத் யூனியனின் அரசியலும் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பிடல் காஸ்ட்ரோ அரசு நிதியிலிருந்து பெரும் தொகையை இதற்கு வழங்கினார்.

காஸ்ட்ரோவின் சட்டப்பூர்வமான மகனான இவர் பின்னர் வேறுவிதங்களிலும் செய்திகளில் அடிபட்டார். ஹவானாவில் நடைபெற்ற சிகார் (cigar) திருவிழாவில் பாரிஸ் ஹில்டன் என்ற அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இவர் எடுத்துக் கொண்ட செல்பிக்கள் பல யூகங்களுக்கு வழிவகுத்தன.

மாஸ்கோவில் மேற்படிப்பு படித்தபோது தன் பெயரை ஜோஸ் ரால் ஃபெர்ணான்டஸ் என்ற புனைப்பெயரில்தான் படிப்பைத் தொடர்ந்தார். ‘காஸ்ட்ரோ’என்ற பெயர் தனக்குத் தேவையில்லாத கவனத்தையும், சங்கடங்களையும் அளிக்கும் என்ற சந்தேகம்தான் காரணம்.

சமீபத்தில் அவரது அறிவியல் கனவுகள் குறித்து - குறிப்பாக நானோ தொழில்நுட்ப ஆய்வுகள் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது ‘அமெரிக்காவில் இருப்பதுபோன்ற தொழில்நுட்பங்களை கியூபாவில் எதிர்பார்க்கக் கூடாது. அது அவசியமும் இல்லை. விமானங்கள், ராக்கெட்டுகள் போன்றவற்றிற்கான அறிவியல் முயற்சிகள் இங்கு அவசியம் இல்லை.

என்றாலும் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும் நாடுகளில் தலைசிறந்த நாடாக கியூபாவை அறிவியல் கோணத்தில் கொண்டு செல்ல முயற்சி செய்கிறேன். எங்களால் நாங்கள் நினைக்கும் அறிவியல் பாகங்களை வாங்க முடியவில்லை. எந்த அறிவியல் கருவியையும், பாகங்களையும் ராணுவத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக எங்கள் உயிரி தொழில் நுட்பம் வளராமல் இருக்கலாமா?’’ என்று கேள்வி கேட்டார்.

‘‘உங்களுக்கு அரசியல் ஆசை உண்டா, இல்லையா?’’ என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன் அளித்த பதில் இதுதான். ‘‘ஒருவேளை என் அடுத்த பிறவியில் அரசியல் ஆசை வரக்கூடும். இப்போதைக்கு விஞ்ஞானியாக இருப்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

இது பிடல் காஸ்ட்ரோவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சிதறல்கள். அவரது அரசியல் போராட்டங்களைப் பார்ப்போம்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x