Published : 01 Jan 2017 12:16 PM
Last Updated : 01 Jan 2017 12:16 PM

ஐ.நா.வின் புதியபொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கிறார் குத்தேரஸ்: பான் கி-மூன் விடைபெற்றார்

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் இன்று பொறுப் பேற்கிறார். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன் நேற்று விடைபெற்றார்.

கடந்த 2007 ஜனவரி 1-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளராக பான் கி-மூன் பொறுப்பேற்றார். 10 ஆண்டுகள் ஐ.நா. சபையை வழிநடத்திய அவரின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையொட்டி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய பான் கி-மூன், டிசம்பர் 31-ம் தேதி இரவுடன் எனது பொறுப்பு நிறைவடைகிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. புதிய பொதுச்செயலாளருடன் இணைந்து மக்கள் நலனுக்காக ஐ.நா. ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரும் ஐ.நா. அகதிகள் அமைப்பின் மூன்னாள் தலைவருமான அந்தோனியோ குத்தேரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்கிறார். அடுத்த 5 ஆண்டுகள் அவர் பதவியில் நீடிப்பார்.

முன்னதாக போர்ச்சுகல் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் எனக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. இதேபோல அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்புடனும் இணைந்து பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன். அவரை விரைவில் சந்தித்துப் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

சிரியா, ஏமன், தெற்கு சூடான், லிபியா ஆகிய நாடுகளில் நடை பெறும் உள்நாட்டுப் போர் இன்ன மும் ஓயவில்லை. இவை உட்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் புதிய பொதுச்செயலாளருக்கு பெரும் சவாலாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x