Published : 29 Nov 2014 09:58 AM
Last Updated : 29 Nov 2014 09:58 AM

உலக மசாலா: வாசனை மாத்திரைகள்

சீனாவைச் சேர்ந்த மார்ஷல் கலைஞர் லி லியாங்பின். உலகிலேயே மிகவும் உறுதியான கழுத்துத் தசைகளைக் கொண்டவர். 49 வயதான லியாங்பின் சின்ன வயதிலிருந்தே குங் ஃபு கலையைக் கற்று வருகிறார். புதுப் புது விஷயங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதுதான் என் மனத்துக்கும் உடலுக்கும் விருப்பமானது என்கிறார். அப்படி ஒரு வித்தியாசமான முயற்சியாகத்தான் மரத்திலிருந்து தொங்கும் கயிற்றை, கழுத்தில் மாட்டிக்கொண்டு கால்கள், கைகளை நீட்டி, மடக்கி வித்தை காட்டுகிறார் லியாங்பின். ’நான் செய்த சவால்களில் இதுதான் மிகவும் கடினமானது. 10 ஆண்டுகள் கடினமாகப் பயிற்சி செய்து இந்த வித்தையைக் கைவசப்படுத்தியிருக்கிறேன். நான் பயிற்சியின் மூலமே இதைச் சாதித்திருக்கிறேன். யாரும் வீட்டில் முயற்சி செய்யாதீர்கள்’ என்கிறார் லியாங்பின்.

எப்பொழுதும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் மார்ஷல் கலைஞர்கள்!

சைபீரியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குத் தினமும் வந்து காத்திருக்கிறது மாஷா என்ற நாய். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாயை வளர்த்தவர், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக யாரும் இல்லை. அவர் வளர்த்த மாஷா, தினமும் காலையிலிருந்து மாலை வரை அவருடன் மருத்துவமனையில் இருக்கும். வீட்டைக் காவல் காப்பதற்காக இரவு வீடு திரும்பிவிடும். இப்படி ஓராண்டு வளர்த்தவரையும் வீட்டையும் கவனித்துக்கொண்டு வந்தது. ஓராண்டுக்கு முன்பு வளர்த்தவர் இறந்துவிட்டார்.

ஆனாலும் வளர்த்தவருக்காகத் தினமும் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கிறது மாஷா. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு குடும்பம் மாஷாவைத் தத்தெடுத்து, அழைத்துச் சென்றது. ஆனால் மறுநாளே மாஷா மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டது. வளர்த்தவர் மீது மாஷாவுக்கு இருக்கும் பாசத்தைக் கண்டு உருகாதவர்களே கிடையாது. மாஷாவுக்கு ஒரு படுக்கையும் தினமும் பால், உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். என்ன செய்தும் மாஷாவின் கண்களில் இருக்கும் சோகத்தை அவர்களால் போக்க முடியவில்லை.

வளர்த்த பாசம் விடாதுன்னு சும்மாவா சொல்லிருக்காங்க!

மாத்திரைகளுக்கும் மாத்திரைகளின் வாசத்துக்கும் பயப்படுகிறவர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். ரோஜா, சாக்லெட் போன்ற நறுமணங்களில் கேப்சூல்கள் வந்து விட்டன. முகம் சுளிக்காமல் கேப்சூல்களைப் போட்டுக்கொள்ளலாம். 65 வயது கிறிஸ்டியன் பாயின்செவல் என்ற பிரெஞ்சுக்காரர் இந்த நறுமணம் மிக்க கேப்சூல்களைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் கஷ்டத்தையும் சாப்பிட்ட பிறகு வரும் ஏப்பத்தையும் பற்றிச் சொன்னார்கள். அவர்களின் கஷ்டத்தைப் போக்கவேண்டும் என்று ஆராய்ச்சியில் இறங்கினேன் என்கிறார் கிறிஸ்டியன். இன்று பல நூறு ஜாடி கேப்சூல்கள் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகின்றன.

மாத்திரைகளுக்காக இனி குழந்தைகள் அடம்பிடிக்க மாட்டாங்க…

இங்கிலாந்தில் வசிக்கும் 101 வயதான ஆன்னி மர்பி, இன்றும் பரபரப்பாக வகுப்புகள் எடுக்கிறார், உரைகள் நிகழ்த்துகிறார். 19 வயதில் ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்தார். 60 வயது வரை சிறப்பாகப் பணி செய்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை தனியாகவே வசித்தவர், தற்போதுதான் காப்பகத்தில் சேர்ந்திருக்கிறார். ‘என் அப்பா நான் படிப்பதற்கு எவ்வளவோ தடைகள் போட்டார். 5 மைல்கள் நடந்து, இரண்டு ரயில்களைப் பிடித்து ஒவ்வொரு நாளும் நான் பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனாலும் படிக்கும் ஆர்வம் குறையவில்லை’ என்கிறார் ஆன்னி. நெல்சன் மண்டேலா, பெண்களுக்கான சம உரிமைகள், தொழிலாளர்களின் நலன் போன்ற எந்தத் தலைப்பிலும் 90 நிமிடங்கள் வரை, குறிப்பு வைத்துக்கொள்ளாமல், பளிங்கு போன்று தெளிவாக உரை நிகழ்த்துகிறார். அவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்கிறது இளைய தலைமுறை.

அபூர்வமானவர் ஆன்னி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x