Published : 23 May 2015 11:10 AM
Last Updated : 23 May 2015 11:10 AM

உலக மசாலா: முதலையிடம் இருந்து மானைக் காப்பாற்ற முயன்ற நீர்யானை

எருது போன்ற தோற்றம் கொண்ட மான் இனத்தைச் சேர்ந்த விலங்கு வில்ட்பீஸ்ட். தென்னாப்பிரிக்காவில் உள்ள சபி வனவிலங்கு பூங்காவில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள் காத்திருந்த முதலை மானை வாயால் கவ்வியது. முதலைக்கும் மானுக்கும் கடுமையான போராட்டம். அந்த வழியே வந்த நீர்யானை சட்டென்று முதலையின் அருகில் வந்தது.

முதலையைத் தன் வாயால் இழுத்தது. ஆனால் முதலை தன் பிடியை விடுவதாக இல்லை. சட்டென்று யோசிக்காமல் மானுக்கும் முதலைக்கும் இடையே தன் தலையை நுழைத்து முதலையின் பிடியை விடுவிக்கப் போராடியது. ஆனால் முதலை நீர்யானையையும் சமாளித்துக் கொண்டு, மானையும் விட்டுவிடாமல் இருந்தது. மூன்று விலங்குகளும் நீண்ட நேரம் போராடின.

மான் உயிர் இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. தான் ஓர் அசைவ பிராணியிடம் மோதிக்கொண்டிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தவுடன் வேகமாக முதலையை விட்டு அகன்றது நீர்யானை. விலங்குகளில் இப்படி அடுத்தவருக்காக உதவ வருவது அரிது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உணவு, உயிர், இரக்கம்… மூன்று விலங்குகளின் போராட்டங்களிலும் நியாயம் இருக்கிறது…

சர்வதேச அளவில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம் ஐ.கே.இ.ஏ. இது உணவுப் பொருட்களையும் விற்பனை செய்து வந்தது. தற்போது வீட்டு உபயோகப் பொருளையும் உணவையும் இணைத்து ஒரு புது தொழிலில் இறங்கியிருக்கிறது. ’தி ஐ.கே.இ.ஏ பிரேக்ஃபாஸ்ட் இன் பெட் கஃபே’ என்ற உணவு விடுதியில் தூங்கவும் செய்யலாம் சாப்பிடவும் செய்யலாம். உணவு விடுதிக்குள் பெரிய அறைகளில் படுக்கைகளுடன் கூடிய கட்டில்கள், இரவு விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

குடும்பத்தோடு வந்து கட்டில்களில் படுத்து ஓய்வெடுக்கலாம். புத்தகம் படிக்கலாம். பாட்டுக் கேட்கலாம். குழந்தைகள் குதித்து விளையாடலாம். பசி எடுத்தால் படுக்கைக்கே உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள். பிரிட்டிஷ், ஸ்வீடிஷ் உணவுகள் வழங்கப்படுகின்றன. ஜூஸ், காபி போன்றவையும் கிடைக்கும். படுக்கையில் அமர்ந்து சாப்பிட்ட பிறகு, அப்படியே மீண்டும் தூக்கத்தைத் தொடரலாம்.

லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவு விடுதி காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்குகிறது. 50 சதவிகித பிரிட்டிஷ் மக்கள் படுக்கையில் உணவு சாப்பிடும் அனுபவத்தை இதுவரை பெற்றதில்லை. அவர்களுக்காகவே இந்தத் தூங்கும் உணவு விடுதியை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார் அதன் உரிமையாளர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 45 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. அதற்குள் சாப்பிட்டு, குட்டித் தூக்கம் போட்டுச் சென்றுவிட வேண்டும்.

படுக்கையில் சாப்பிடுவது எல்லாம் ஒரு அனுபவமா?

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ரெஜின் க்ரைஸ். கடந்த 10 ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை ஆராய்ச்சி செய்துவருகிறார். இந்த ஆராய்ச்சியில் அவரது கணவர் கெர்ஹார்ட் உதவி செய்து வருகிறார். தன்னுடைய ஆராய்ச்சிக்காக ஆயிரம் மூட்டைப் பூச்சிகளை 5 குடுவைகளில் போட்டு வளர்த்து வருகிறார் க்ரைஸ். மாதத்துக்கு ஒருமுறை குடுவைகளைத் திறந்து, தங்கள் கைகள் மீது கவிழ்க்கிறார்கள். அப்பொழுது மூட்டைப் பூச்சிகள் தங்களுக்கு வேண்டிய அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சிக்கொள்கின்றன.

‘‘ஒரே நேரத்தில் மூட்டைப் பூச்சிகள் கடிக்கும்போது கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும். ஆராய்ச்சிக்காகப் பொறுத்துக்கொள்வோம். 10 நிமிடங்களில் பாட்டிலை எடுத்துவிடுவோம். மூட்டைப் பூச்சி கடித்த இடங்கள் வீங்கியிருக்கும். ஆனால் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படாது’’ என்கிறார் க்ரைஸ். கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் தடவையாவது தங்கள் ரத்தத்தை மூட்டைப் பூச்சிகளுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்தத் தம்பதியர். மனித உடலில் மட்டுமில்லை, கினியா பன்றி, கோழி போன்றவற்றையும் மூட்டைப் பூச்சிகளைக் கடிக்க வைத்து ஆராய்ச்சி செய்து முடித்திருக்கிறார் க்ரைஸ். இதன் மூலம் மூட்டைப் பூச்சி ஒழிப்பதற்கான ரசாயனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். கனடாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று க்ரைஸ் தம்பதியினரின் கண்டுபிடிப்பைக் கேட்டிருக்கிறது.

அபூர்வமான ஆராய்ச்சியாளர்கள்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x