Published : 14 Aug 2015 09:43 AM
Last Updated : 14 Aug 2015 09:43 AM

உலக மசாலா: பையில் அடங்கும் கார்

பையில் வைத்து எடுத்துச் செல்லும் அளவுக்கு ஒரு காரைக் கண்டுபிடித்திருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த எஞ்சினியர் குனைகோ சைட்டோ. இது அமர்ந்து செல்லும் கார் அல்ல, நின்றுகொண்டே பயணிக்கும் கார். இதற்கு ‘வாக் கார்’ என்று பெயரிட்டிருக்கிறார். லேப்டாப் அளவுக்கு இருக்கிறது இந்த வாக் கார். ஸ்கேட் போர்ட் போலவே வேலை செய்கிறது. ஆனால் இதன் மீது நின்றுகொண்டு நாம் எந்த விசையையும் செலுத்த வேண்டியதில்லை. மிக வேகமாகப் பயணிக்கலாம். படிகள் குறுக்கிட்டால், வாக் கார் நின்றுவிடும். மீண்டும் சமதளத்தில் வைத்தால் வேகமாக ஓட ஆரம்பித்துவிடும்.

இறக்கத்தில் மட்டுமல்ல, செங்குத்தான இடங்களில் ஏறிச் செல்லவும் முடியும். எந்தப் பகுதியில் திரும்ப வேண்டுமோ, அந்தப் பகுதியை நோக்கி உடல் எடையை அழுத்தினால் போதும். தானாகச் சென்றுவிடும். கோகோ மோட்டார்ஸ் நிறுவனம் இவருடன் கைகோத்திருக்கிறது. வாக் காரை இன்னும் எப்படி எல்லாம் மேம்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்துவருகிறார்கள். லித்தியம் பாட்டரிகளால் இந்த வாக் காருக்கு வேண்டிய சக்தி கிடைக்கிறது. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், 7.4 மைல் தூரம் செல்ல முடியும். 120 கிலோ எடையைத் தாங்கக்கூடியது.

வாக் காரில் நின்றுகொண்டு எடை சுமந்த ட்ராலிகள், சக்கர வண்டிகள் போன்றவற்றைக் கைகளால் பிடித்துக்கொண்டால், எளிதில் அவற்றையும் எடுத்துச் சென்றுவிடலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆண்டு அக்டோபரில் இருந்து முன்பதிவு செய்யலாம். ஒரு வாக் காரின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய்.

நம்ம சாலைகளுக்கு இந்த காரை யோசிக்கவே முடியாது…

சீனாவில் வசிக்கிறார் 39 வயது லியு ஜிங்சோங். கோடீஸ்வரராக இருந்தவர், இன்று புத்த துறவியாக மாறியிருக்கிறார். கோடிக் கணக்கில் வருமானம் கொழிக்கும் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்தார். எவ்வளவு வருமானம் வந்தபோதும், போதும் என்று தோன்றியதே இல்லை. ஆனாலும் இந்த வருமானத்தால் அவருக்கு முழுமையான சந்தோஷம் கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் காட்டு வழியே காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, மோசமான விபத்து ஏற்பட்டது. புது காரை வரவழைத்தார் லியு. ஆனால் அதில் எல்லோருக்கும் இடம் இல்லை. அவரை விட மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களை அனுப்பிவிட்டு, அருகில் இருந்த விடுதியில் தங்கிக்கொண்டார். கையில் மருந்து இல்லை. புத்தரின் புத்தகம் ஒன்றுதான் இருந்தது. அதைப் படிக்க, படிக்க அவரது வலி மறந்து போனது. இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிவிட்டாலும் புத்தர் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தார். தொழிற்சாலை, பங்களா, கார்கள், குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு துறவு வாழ்க்கை நோக்கிக் கிளம்பிவிட்டார். ஸோங்னன் மலையில் மிகக் குறைந்த தேவைகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

வைக்கோல் படுக்கை, தியானம், படிப்பு என்று வாழ்க்கை நகர்ந்தது. கோயிலில் உள்ள பொதுச் சமையலறையில் சமையல் வேலைகளையும் செய்துவருகிறார். மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் நகரத்துக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்.

நீங்க சொல்றது முற்றிலும் உண்மை லியு!

இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் போர் நடைபெற்ற காலகட்டத்திலும் ஜப்பானிய ராணுவ வீரர்கள், தென்கொரிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். 13, 15 வயது சின்னஞ்சிறு பெண்களால் ராணுவ வீரர்களிடமிருந்து தப்பிச் செல்ல இயலவில்லை. தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டதால் நிறையப் பெண்கள் இறந்து போனார்கள்.

சிலரின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இன்னும் சில பெண்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். பல பெண்கள் நடந்த கொடுமையை வெளியே சொல்லாமல், திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டனர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் உயிருடன் இருக்கும் சில பெண்கள், ஜப்பான் தங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று போராடி வருகிறார்கள். இவர்களுக்காகப் பல்வேறு பெண்ணுரிமை இயக்கங்கள் உலகம் முழுவதும் போராடி வருகின்றன. 1993ம் ஆண்டு ஜப்பான் மன்னிப்பு கோரியது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையான மன்னிப்பைக் கோர வேண்டும் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x