Published : 23 Jan 2015 10:47 AM
Last Updated : 23 Jan 2015 10:47 AM

உலக மசாலா: தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண்

பனி சூழ்ந்த அலாஸ்காவில் மெண்டென்ஹால் பனிப்பாறை மிகவும் புகழ்பெற்றது. இந்தப் பாறைப் பிளவுக்குள் சென்று புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பது கெண்ட் மியரிக்கின் ஆசை. அலாஸ்காவில் வசித்து வரும் மியரிக், இரண்டு வழிகாட்டிகளுடன் 50 அடி ஆழம் கொண்ட பனிப்பாறை பிளவுக்குள் கயிற்றின் மூலம் இறங்கினார். கண்ணாடியால் செய்த குகையைப் போல, நீல நிறத்தில் அற்புதமாக ஜொலித்தன பனிப்பாறைகள். விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார் மியரிக். சில இடங்களில் தண்ணீர் மேலே வந்துகொண்டிருந்தது. மிகவும் ஆபத்தான இடத்துக்குச் சென்று, புகைப்படங்கள் எடுத்து, பத்திரமாகத் திரும்பியிருக்கிறார் மியரிக்.

புகைப்படங்களைப் பார்க்கும்போதே மெய்சிலிர்க்குது!

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் வசிக்கிறார் 65 வயது காங் ஸெனியன். கடந்த 40 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளி, மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். `தெருவில் ஆதரவின்றி ஒரு குழந்தை நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் என்னால் தாங்கவே முடியவில்லை. அன்று ஆரம்பித்த பழக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களைப் புறக்கணித்ததை விட பெரிய குறைபாடு குழந்தைகளுக்கு வேறு உண்டா?’ என்கிறார் காங். இதுவரை 39 குழந்தைகளை எடுத்து வளர்த்து வருகிறார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் முதல் ஒரு மாதக் குழந்தை வரை இவரிடம் வளர்கின்றன. ஆனால் சீனாவில் 3 குழந்தைகளுக்கு மேல் தத்தெடுக்க அனுமதி இல்லை. சட்டத்தை மீறிய குற்றத்துக்காக காங்கின் நிலத்தை எடுத்துக்கொண்டு, உதவிகளையும் நிறுத்திவிட்டது அரசாங்கம். ஆனாலும் காங் கலங்கவில்லை. தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து சம்பாதிக்கிறார். அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மனிதர்கள் பணம், உணவு, உடை போன்றவற்றைக் கொடுத்து உதவி வருகிறார்கள். நல்ல மனம் படைத்த மனிதர்கள் இருக்கும் வரை எனக்குக் கவலை இல்லை என்கிறார் காங்.

நல்ல செயல்களை ஆதரிக்க வேண்டிய அரசாங்கம், இப்படித் தண்டனை தரலாமா?

ஃப்ளோரிடாவில் உள்ள உயிரியியல் பூங்காவில் விலங்குகளைப் பற்றிப் படம் எடுத்துக்கொண்டிருந்தனர். இரண்டு குரங்குகளுக்கு ஆண், பெண் ஆடைகளை அணிவித்து படம் எடுத்தபோது ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. பெண் குரங்கு ஏதோ வருத்தத்தில் கையால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறது. ஆண் குரங்கு பெண்ணின் தோள் மீது கையைப் போட்டு ஆதரவாக அணைத்து, தட்டிக்கொடுக்கிறது. கழுத்தில் கைகளை வைத்து மசாஜ் செய்கிறது. மனிதர்களைப் போலவே குரங்கும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர்!

சரியாகத்தான் சொல்லியிருக்கார் டார்வின்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 41 வயது கெர்ரி உல்ஃப், பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுக்கத் தயாரானார்கள். `என் உடல், என் பிரசவம், என் குழந்தை… நானே என் குழந்தையை வெளியில் எடுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார் கெர்ரி. மருத்துவர்கள் வயிற்றைக் கிழித்ததும் தன் கைகளாலேயே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை வெளியே எடுத்தார். கெர்ரியின் தைரியத்தைக் கண்டு எல்லோரும் மலைத்துப் போனார்கள். `ஏற்கெனவே ஒன்பது குழந்தைகள் எனக்கு இருக்கின்றன. இத்தனைப் பிரசவத்தில் இவ்வளவு தைரியம் கூட வரவில்லை என்றால் எப்படி?’ என்கிறார் கெர்ரி.

கெர்ரி சொல்வதும் சரிதான்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x