Published : 22 Mar 2017 09:43 AM
Last Updated : 22 Mar 2017 09:43 AM

உலக மசாலா: சீன ரயில் திட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன!

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சாங்க்விங், மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம். இங்கே 31,000 சதுர மைல்களில் 4.9 கோடி மக்கள் வசிக்கிறார்கள். காலியான இடம் கிடைப்பதே கடினம். புதிதாக சாலையோ ரயில் வழித்தடமோ அமைப்பதற்குக்கூட இடம் இல்லை. அதற்காக போக்குவரத்து வசதிகள் செய்யாமல் இருக்க முடியாது. ரயில் செல்லும் பாதையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்காமல், ரயில் பாதையை அமைத்துள்ளனர். 19 மாடிகள் கொண்ட மூன்று குடியிருப்புகளுக்குள் ரயில்கள் செல்லுமாறு இந்த பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. 6, 7, 8-வது தளங்கள் மட்டும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைக்குக் கீழும், மேலும் மக்கள் குடியிருக்கிறார்கள். ஒரு ரயில் போவதற்கும் இன்னொரு ரயில் வருவதற்குமாக இரண்டு பாதைகள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. ரயில் செல்லும் சத்தம் குடியிருப்புவாசிகளைப் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக ஒலி உள்வாங்கிக்கொள்ளும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. “கட்டிடத்தைப் பாதிக்காத வகையில் எடை குறைந்த தண்டவாளங்கள்தான் போடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டிடத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓடும்போது சில நேரங்களில் பாத்திரம் சுத்தம் செய்யும்போது கருவியில் வரும் ஒலி போல் கேட்கும். மற்றபடி எங்கள் தலைக்கு மேல் ரயில்கள் ஓடுகின்றன என்ற நினைப்பே வராது. வரிசையாக மூன்று குடியிருப்புகளுக்குள் நுழைந்து ரயில் வெளிவருவதைப் பார்க்க அற்புதமாக இருக்கும்!” என்கிறார் ஒரு குடியிருப்பு வாசி.

அடடா! சீன ரயில் திட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன!

பெல்ஜியத்தின் பிரெலென் நகரில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கே ஒரு தேவாலயத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை கூட்டம் முடிந்த பிறகு, மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கிராமத்தில் இருந்த மதுபானக் கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. மக்கள் மதுவுக்காக மிகவும் சிரமப்பட்டனர். மக்களின் கஷ்டத்தை அறிந்த தேவாலய பாதிரியார் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்த பிறகு, மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கினார். பிரெலெனில் உள்ள பிராட்டஸ்டாண்ட் தேவாலயம், மனிதர்கள் மகிழ்ச்சியோடு மதுபானங்களை அருந்தும்போது கடவுளுக்கு நெருக்கமாக செல்கிறார்கள் என்கிறது. உள்ளூர் அரசாங்க அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றே மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. ஞாயிறு பிரார்த்தனை முடியும் வரை வழக்கமான தேவாலயமாகக் காட்சியளிக்கும். பிரார்த்தனை முடிந்த சிறிது நேரத்தில் மதுபானக் கடையாக மாறிவிடும். தேவாலயம் சில விதிகளை உருவாக்கி, அதைக் கடுமையாகக் கடைபிடித்து வருகிறது. பிரார்த்தனைக்கு வருகிறவர்கள் மட்டுமே மதுவை வாங்க முடியும். அளவுக்கு அதிகமாகக் குடிக்கக்கூடாது. ஆனால் ஆடவோ, இசைக்கவோ, பாடவோ கூடாது. மதியம் 1 மணிக்கு முன்பு எல்லோரும் இடத்தைக் காலி செய்துவிட வேண்டும்.

வித்தியாசமான தேவாலயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x