Published : 06 Jan 2015 11:20 AM
Last Updated : 06 Jan 2015 11:20 AM

உலக மசாலா: குணமடையும் ஷுமேக்கர்

நோயல் க்ரூஸ் கலிஃபோர்னியாவில் வசிக்கிறார். நிஜ மனிதர்களின் உருவங் களை அச்சு அசலாக பார்பி பொம்மை அளவுக்குச் செய்து விடுகிறார். புகைப்படத்தில் பார்ப்பதற்கு பொம்மை போன்றே தோற்றம் தராமல், அத்தனை தத்ரூபமாக இருக் கின்றன இந்தப் பொம்மைகள். மர்லின் மன்றோ, மைக்கேல் ஜாக்சன், ஏஞ்சலினா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ், ஹாரிபாட்டர் என்று புகழ் பெற்றவர்களின் பொம் மைகளை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறார்.

சமீபத்தில் இவரது கவனம் பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது விழுந்தது. டயானா, கேட் மிடில்டன் ஆகியோரது பொம்மைகளைச் செய்திருக்கிறார். இந்தப் பொம்மைகளின் விலை மூன்றே கால் லட்சம் ரூபாய். பார்பி போன்ற பொம்மைகளை வாங்கி, பிரபலங்களின் புகைப்படங்களை வைத்து, முகத்துக்கு வண்ணம் தீட்டுகிறார். தலை முடியை மாற்றுகிறார். மூன்று நாட்களில் ஒரு பிரபலமானவரின் பொம்மையை உருவாக்கிவிடுகிறார். தன் மனைவி விதவிதமான பொம்மைகளைச் சேர்க்கக்கூடியவர். அதைப் பார்த்துதான் தனக்கு இந்த யோசனை வந்ததாகச் சொல்கிறார் க்ரூஸ்.

என்னதான் உங்க திறமை பிரமாதம்னாலும் மூணு லட்சம் ரொம்பவே அதிகம்…

பார்முலா நம்பர் ஒன் சாம்பியன் மைக்கேல் ஷுமேக்கர் கடந்த ஆண்டு பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு அவர் உடல்நிலையில் மிகவும் மெதுவான முன்னேற்றம் தெரிவதாகச் சொல்கிறார்கள். கண்களைத் திறந்து பார்க்கிறார், பழகியவர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்கிறார், மனைவி மற்றும் குழந்தைகளின் குரல்களைக் கேட்டு கண்ணீர் விடுகிறார்… ஆனால் அவரால் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த இயலவில்லை. ஷுமேக்கர் விரைவில் நலம் பெறுவார் என்று அவரது குடும்பத்தினரும் மருத்துவர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

சீக்கிரம் பழைய நிலைக்கு வாங்க ஷுமேக்கர்…

அமெரிக்காவில் ஓஹியோவில் வசிக்கும் டென்னிஸ் என்ற நாய் மீது அதன் உரிமையாளர்களுக்கு அளவு கடந்த அன்பு. அவர்கள் சாப்பிடும் உணவுகளை எல்லாம் நாய்க்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். வால்ரஸ் உடல் போல நாயின் உடல் பெருத்துவிட்டது. நடப்பதற்குக் கூட சிரமமாகிவிட்டது. கடுமையான உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் ஓராண்டில் 5 கிலோ குறைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் கொஞ்சம் பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும் என்ற மருத்துவர்கள், நாய் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணவு மூலம் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். உணவுகளுக்குப் பழகிப் போன டென்னிஸுக்கு இன்னும் உணவு மீது ஆசை விடவில்லை என்கிறார்கள்.

அன்பு அவஸ்தையாக மாறிவிடக்கூடாது…

இத்தாலியைச் சேர்ந்த லிவியோ டி மார்சி என்ற கலைஞர் மரத்தால் செய்யப்பட்ட பெராரி காரை உருவாக்கியிருக்கிறார். 5 மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த மர காரில் படகு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வெனிஸ் நதியில் காரை இறக்கிய லிவியோ, இயந்திரப் படகு போல் ஓட்டிச் சென்றார்! படகை விட இந்த மர பெராரி அழகாக இருப்பதாக எல்லோரும் பாராட்டினார்கள்.

பெட்ரோல் இல்லாமல் ஓடற கார்களைக் கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x