Published : 05 Dec 2015 12:50 PM
Last Updated : 05 Dec 2015 12:50 PM

உலக மசாலா: இனிமேலாவது உங்கள் துயரம் தீரட்டும் மார்க்...

டிசம்பர் இரண்டாம் தேதியை சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நாளாகக் கடைபிடித்து வருகிறது சீனா. ஆனாலும் சீனாவின் பல பகுதிகளில் உள்ள சாலைகளில் செல்லும் வாகனங்களைப் பார்த்தால் திகில் ஏற்பட்டுவிடுகிறது. இரண்டு தடவை எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல வாகன ஓட்டிகள் துணிச்சலாக முடிவெடுக்கிறார்கள்.

ஒரு சிறிய வாகனம், மிகப் பெரிய அளவில் பொருட்களை எடுத்துச் செல்லும்போது சாலையையே அடைத்துக்கொண்டு செல்கிறது. அட்டைப் பெட்டிகள், ஹீலியம் பலூன்கள், வைக்கோல்கள், ராட்சசக் குழாய்கள், அரிசி மூட்டைகள் போன்ற பல பொருட்களும் செல்லப்படுகின்றன.

இரு சக்கர வாகனத்தில் 3 பெரியவர்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் தைரியமாகப் பயணிக்கின்றனர். சீனாவில் உள்ள 80 சதவீத டிரக்குகள் அதிக எடைகளைத்தான் சுமந்து செல்கின்றன. இதனால் 6,60,000 பாலங்களில் அடிக்கடி சேதம் ஏற்படுகிறது. விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. வாகனச் சட்டத்தை மேலும் கடுமையாக்க இருக்கிறது சீனா.

சாலைகளில் சர்க்கஸ்!

நியூயார்க்கைச் சேர்ந்த மார்க் ரே ஃபேஷன் போட்டோகிராபர். 6 ஆண்டுகள் ஃபேஷன் உலகில் மாடலாகவும் இருந்திருக்கிறார். ஆனால் இன்று வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல, அவருக்கு ஒரு வீடு இல்லை.

நியூயார்க்கில் இருக்கும் வீடற்ற ஆயிரக்கணக்கான மனிதர்களில் மார்க்கும் ஒருவர். பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பிறகு ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வேலை செய்தார் மார்க். பிறகு 4 ஆண்டுகள் மாடலாகவும் வலம் வந்தார்.

ஆனாலும் வருமானம் ஒன்றும் பெரிதாக இல்லை. மீண்டும் நியூயார்க் திரும்பினார். பின்னர் ஃபேஷன் போட்டோகிராபியில் கவனம் செலுத்தினார். “ஃபேஷன் துறையில் இருந்ததால் இந்த வேலை எளிதாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதிலும் தோல்வியையே சந்தித்தேன். சேமிப்பும் கரைந்துவிட்டது. அதனால் உணவகத்தில் வேலை செய்து வந்தேன். தங்குவதற்கு இடம் இல்லை. கிடைத்த இடங்களில் தூங்குவேன். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, ஒரு ஜிம்மில் சேர்ந்துகொண்டேன்.

அங்கே குளிக்க, துவைக்க, துணியை இஸ்திரி போடஎன்று பல வசதிகள். மீண்டும் மாடலிங் துறையில் மிகச் சிறிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் நியூயார்க்கில் ஒரு மனிதன் வாழ்க்கை நடத்துவதற்கு இது போதுமானதாக இருக்காது.

என் வாழ்க்கையில் நான் எப்போதுமே என் கஷ்டத்தை நினைத்து கவலைப்பட்டதில்லை. மாடலாக, நடிகராக, போட்டோகிராபராக நல்ல வேலைகளில்தான் இருந்திருக்கிறேன். ஆனாலும் என் பொருளாதார நிலைமை சீரடையவில்லை’’ என்கிறார் மார்க். வீடற்ற மாடல் என்ற பெயரில் மார்க்கை வைத்து ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இனிமேலாவது உங்கள் துயரம் தீரட்டும் மார்க்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x