Last Updated : 06 Oct, 2016 12:03 PM

 

Published : 06 Oct 2016 12:03 PM
Last Updated : 06 Oct 2016 12:03 PM

உலக மசாலா: அன்புக்கு ஏங்கும் கிளி!

பாஸ்டனில் வசிக்கும் இசபெல்லா, இணையத்தில் வெளியிட்டுள்ள கிளியைப் பார்த்து உலகமே அதிர்ந்திருக்கிறது. இறகுகள் முழுவதும் உதிர்ந்து, வெற்றுத் தோலுடன் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது கிளி.

“என் நாய் வாசலுக்கு அழைத்தது. அங்கே மசாலாவுக்குத் தயாராக இருக்கும் இறைச்சி போல இந்தக் கிளி இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென்று என்னிடம் ஒட்டிக்கொண்டது. மருத்துவரிடம் காட்டியபோது, வைரஸ் பாதிப்பால் இறகுகள் கொட்டிவிட்டன என்றார். இந்த நோய்க்கு மருத்துவம் இல்லை. வாழ்நாள் முழுவதும் கிளி இப்படித்தான் இருக்கப் போகிறது. இறகுகள் இல்லாததால், குளிரைத் தாங்க முடியவில்லை. இரவெல்லாம் கம்பளிக்குள் வைத்திருப்பேன். பகலில் ஸ்வெட்டர்களை அணிவிக்கிறேன்.

நோய் வந்த கிளியை ஏன் பராமரிக்கிறாய் என்று கேட்கிறார்கள். இறகுகள் உதிர்ந்தாலும் கிளிதானே? மனிதர்கள் இதை வெறுத்தாலும், மனிதர்களின் அன்புக்காக மிகவும் ஏங்குகிறது. இணையத்தில் படங்களை வெளியிட்ட பிறகு, உலகம் முழுவதிலுமிருந்து கிளிக்கு கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், உணவுகள், ஸ்வெட்டர்கள் என்று வந்துகொண்டே இருக்கின்றன. நோய் பாதிப்பு குறைவாக இருப்பதால், அதன் உயிருக்கு உடனே எந்த ஆபத்தும் இல்லை. கிளி வாழும் வரை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்” என்கிறார் இசபெல்லா.

சிறகுகள் உதிர்ந்த பறவை!

அயர்லாந்தின் டப்ளின் நகரில் அப்னர் ப்ரவுன்ஸ் முடிதிருத்தும் கடை மிகவும் புகழ்பெற்றது. அயர்லாந்துக்கு வருகிறவர்கள், இந்தக் கடைக்கு வராமல் செல்வதில்லை. 17 ஆண்டுகளாக முடி திருத்தும் கடையை நடத்தி வருகிறார் டேவ் ஜட்ஜ். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகத்தான் இந்த மாற்றத்தைச் சந்தித்து வருகிறார்.

“முடிதிருத்தும் கடையை முன்னேற்றுவதற்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நான் நினைத்ததுபோல வருமானம் இல்லை. மிகுந்த பொருளாதார கஷ்டத்தில் மூழ்கிவிட்டேன். கடையில் ஏதாவது மாற்றம் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. சில கிதார்களை வாங்கி, கடையின் ஒரு பகுதியில் வைத்தேன். இசை தொடர்பான படங்களைச் சுவர்களில் மாட்டி வைத்தேன். என் மனைவியை அவ்வப்போது கிதார் வாசிக்கச் சொன்னேன்.

ஒருநாள் கனடாவைச் சேர்ந்த பாடகர் ப்ளேர் பெக்ஹாம் இந்த வழியாக வந்தார். சட்டென்று எங்கள் கடைக்குள் நுழைந்தார். அவர் முடிதிருத்துவதற்காக வருகிறார் என்று நினைத்தேன். ஆனால் கிதாரை மீட்டி, பாட ஆரம்பித்தார். பலரும் கடைக்குள் வந்து, அவரின் பாடல்களைக் கேட்டனர். இந்த விஷயம் பரவியது. உள்ளூர் இசைக் குழுக்கள் இங்கே வந்து பாடுவதற்கு ஆர்வம் காட்டின. இன்னும் சில இசைக் கருவிகளை வாங்கி வைத்தேன். முடி வெட்ட வருபவர்களைவிட, இசை கேட்க வருகிறவர்களின் கூட்டம் அதிகரித்தது.

இரவு நேரங்களில் இசையும் பகல் நேரங்களில் முடி திருத்தும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம். இரண்டு தொழில்களும் பிரமாதமாக போய்க்கொண்டிருக்கின்றன. விபத்து போல நடந்த சின்ன மாற்றம், இன்று எங்களை உயரத்தில் வைத்திருக்கிறது” என்கிறார் டேவ் ஜட்ஜ்.

மாற்றம்; முன்னேற்றம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x