Last Updated : 08 Nov, 2016 11:45 AM

 

Published : 08 Nov 2016 11:45 AM
Last Updated : 08 Nov 2016 11:45 AM

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்

உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் முதலில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

2000, 2004, 2008-ம் ஆண்டுகளில் டிக்ஸ்வில்லி பகுதியில் வெற்றி பெற்றவர்களே அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டிருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள், வாக்குப்பதிவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதிபர் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. மாறாக, நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா (மாகாணத்தின் கீழ் வராத வாஷிங்டன் நகரம்) மாவட்டத்திலிருந்து 538 தேர்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பொது மக்கள் இன்று வாக்களிப்பார்கள்.

இந்த வாக்குகள் மாகாண அளவிலேயே நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் அடிப்படையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிய வரும்.

எனினும், இந்த தேர்வாளர்கள் புதிய அதிபர் மற்றும் துணை அதிபரை டிசம்பர் 19-ம் தேதி முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். இதில் வெற்றி பெற குறைந்தபட்சம் 270 தேர்வாளர்களின் ஆதரவு தேவை. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்.

அமெரிக்காவின் 45வது அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x