Published : 31 Jan 2017 03:06 PM
Last Updated : 31 Jan 2017 03:06 PM

அதிபர் ட்ரம்ப் தடை உத்தரவை செயல்படுத்தாத அட்டர்னி ஜெனரல் அதிரடி நீக்கம்

அதிபர் டொனால்டு ட்ரம்பின் விசா, அகதிகள் தடை குறித்த புதிய உத்தரவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று அரசு சட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய காரணத்திற்காக ஒபாமாவால் நியமிக்கப்பட்ட அட்டர்னி ஜெனரல் சாலி யேட்ஸ் என்பவரை அதிபர் ட்ரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கும் போது, “அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பதற்கான சட்ட உத்தரவை அமல் செய்ய மறுத்து சாலி யேட்ஸ் நீதித்துறையை ஏமாற்றியுள்ளார். யேட்ஸ் ஒபாமா நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டவர். இவர் எல்லை விவகாரங்களிலும், சட்ட விரோத குடியேற்ற விவகாரங்களைக் கையாள்வதிலும் மிகவும் பலவீனமானவர்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தன் அலுவலகத்தை விட்டுக் கடைசியாகச் செல்லும் போது, ‘நாட்டின் முக்கிய மதிப்பீடுகள் நெருக்கடிக்குள்ளாகும் போது ட்ரம்ப் ஆட்சியை நான் விமர்சிப்பேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் உத்தரவுக்கு எதிரான போராட்டங்களை ஒபாமா கடுமையாக ஆதரித்து பேசியுள்ளார்.

அதாவது தனிநபர்களை அவர்களது மதத்தை வைத்து பாகுபாடு செய்யலாகாது, இதனை ஒபாமா கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சாலி யேட்ஸ் மட்டுமல்லாமல், குடியேற்ற மற்றும் கஸ்டம்ஸ் அமலாக்க இயக்குநர் டேனியல் ரக்ஸ்டேல் என்பவரையும் ட்ரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.

இது குறித்து ஹோம்லேண்ட் செக்யூரிட்டி ஓய்வு பெற்ற செயலர் ஜான் கெல்லி கூறும்போது, தாமஸ் டி. ஹோமன் என்பவரை ட்ரம்ப் இந்தப் பதவிக்கு நியமித்துள்ளார் என்றார். மேலும் தேச நலன் கருதி ஹோமனுடன் சேர்ந்து குடியேற்ற விதிகளை அமெரிக்க உட்புற பகுதிகளில் திறம்பட நடைமுறைப்படுத்த உதவுவேன் என்று கூறியுள்ளார் ஜான் கெல்லி.

போராட்டம் வலுக்கிறது

அதிபர் ட்ரம்பின் விசா தடை உத்தரவு சர்வதேச அளவில் அமெரிக்காவின் நன்மதிப்பை குலைத்துவிட்டதாக பாதிக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். ஜனநாயக கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி ஆளும் குடியரசு கட்சிக்குள்ளேயே ட்ரம்புக்கு எதிராக பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதேபோல வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களும் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன.

விசா தடை உத்தரவுக்கு எதிராக நியூயார்க், வெர்ஜினியா நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

தடை உத்தரவால் விமான நிலையங்களில் பரிதவிக்கும் பயணிகளுக்கு மூத்த வழக்கறிஞர் கள் பலர் சேவை அடிப்படையில் சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். நியூயார்க் கால் டாக்ஸி டிரைவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை விமான நிலையத்துக்கு கார்களை இயக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் வாஷிங் டன் உட்பட அமெரிக்கா முழுவதும் ட்ரம்புக்கு எதிராக பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒபாமா கண்டனம்

முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கி றது, மக்களின் உரிமைகளைப் பறிக்கும்போது அவர்கள் கொதித் தெழுவது இயல்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x