Last Updated : 06 Oct, 2016 11:51 AM

 

Published : 06 Oct 2016 11:51 AM
Last Updated : 06 Oct 2016 11:51 AM

அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என மார்ஷல்ஸ் தீவுகள் புகார்: இந்தியாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐ.நா. நீதிமன்றம்

அணுஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை எனக் கூறி இந்தியாவுக்கு எதிராக மார்ஷல்ஸ் தீவுகள் தொடர்ந்த வழக்கை ஐ.நா. நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

பசிபிக் நாடான மார்ஷல்ஸ் தீவுகள், தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், இந்தியா உள்ளிட்ட 9 நாடுகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (1968) மீறி வருகின்றன. அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என புகார் கூறியது.

குறிப்பாக, இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூட இல்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. உலகில் அணு ஆயுதத்தைக் கட்டுப்படுத்த வகை செய்யும் இந்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்குமாறு இந்த நாடுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சீனா, பிரான்ஸ், இஸ்ரேல், வடகொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 6 நாடுகளுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரம் இல்லை என தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்டது.

எனினும், இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன் ஆகிய 3 நாடுகளுக்கு எதிரான புகார் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், நீதிபதி ரொன்னி ஆப்ரஹாம் தலைமையிலான 16 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்கு எதிரான புகாரை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என இந்தியா சார்பில் வாதிடப்பட்டது.

இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவாக 9 நீதிபதிகளும் எதிராக 7 நீதிபதிகளும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில், இந்தியாவுக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். பின்னர் பாகிஸ்தான், பிரிட்டனுக்கு எதிரான மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆனால், அணு ஆயுதம் தொடர்பாக மார்ஷல்ஸ் தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே இதற்கு முன்பு எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. எனவேதான் இந்தியாவுக்கு எதிரான மனுவை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x