Published : 14 Jul 2019 05:17 PM
Last Updated : 14 Jul 2019 05:17 PM

மோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித்துறை?- வேல்முருகன் கேள்வி

19 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்திற்கு நம்மைத் தள்ளும் மோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித்துறை? அரசுப் பள்ளிகளைப் படிப்படியாக மூடி வருவதேன்? அங்கன்வாடி - சத்துணவுக் காலிப் பணியிடங்களை நிரப்பாதது ஏன்? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகமெங்கும் 68 ஆயிரம் சத்துணவு மையங்கள் மற்றும் 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றின் பணியாளர் எண்ணிக்கை 2.5 லட்சம். இதில் 40 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று, 2014 ஆம் ஆண்டில் சத்துணவுப் பணியாளர் போராட்டத்தின்போது தெரியவந்தது. அந்தப் போராட்டத்தில் அவர்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

அதன்பின் கடந்த 2018-ம் ஆண்டிலும் சத்துணவுப் பணியாளர்கள் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். அப்போது தெரியவந்த தகவல், தமிழகத்தில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள், 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் என்பதாகும்.

இப்போது தெரியவந்திருக்கும் சேதி, அந்த 30 ஆயிரம் காலிப் பணியிடங்களும் இதுவரை நிரப்பப்படவில்லை; ஒரு சத்துணவு ஊழியர் குறைந்தபட்சம் 3 மையங்களுக்குப் பணியாற்றுகிறார் என்பது. 2014ஆம் ஆண்டிலிருந்து கவனிப்போமானால் 1 லட்சத்து 34 ஆயிரம் ஊழியர்கள் குறைந்திருப்பது தெரிகிறது. அதாவது இப்போது ஊழியர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழாகிவிட்டது.

இது எப்படி நடந்தது? வேறென்ன, பள்ளிகள் மூடப்பட்டதால்தான்!

தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் மாணவர்கள் சேரவில்லை என்று பள்ளிகளை மூடுவது நடந்து வருகிறது. மேலும், ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளி என ஆயிரக்கணக்கில் உள்ளன; அவற்றில் பாதிக்கு மேல் மூடப்பட்டுள்ளன.

இந்தக் கொடுமைகளுக்கு நடுவில் மாணவர்களே இல்லாமல், ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளும் இருப்பதாகத் தெரிகிறது. உதாரணத்திற்கு, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாதிபுரம் கிராத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி! அந்தப் பள்ளியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே மாணவர் சேர்க்கை இருந்ததாகவும், இப்போது சுத்தமாக இல்லை என்றும் தெரியவருகிறது. அந்தக் கிராமத்தினர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்று காரணம் சொல்லப்பட்டாலும், அவர்களை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வைப்பது மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அந்தப் பள்ளி ஆசிரியர்களின் கடமை அல்லவா? அந்தக் கடமையினின்றும் தவறியமை அமைச்சருக்கோ, அரசுக்கோ தெரியாதா?

பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டு, பணியாளர் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது என்பது ஒருபுறமிருக்க, காலத்திற்கு ஒவ்வாத மிகக் குறைந்த கூலியில் பணியாற்ற யார் தான் ஆர்வம் காட்டுவார்? இந்தக் கேள்வியும் பணியாளர் குறைவுக்கு ஒரு சிறிய காரணமாயிருக்கலாம். இவ்வளவுக்கும் சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை மிகமிகச் சாதாரணமானது. சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5200, சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.4800; இது ஊதியக்குழு பரிந்துரைத்த கூலி. இந்தக் கூலி அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதற்குக் குறைவாக சத்துணவு அமைப்பாளருக்கே 4500க்குள்தான் கூலி. காலமுறை ஊதியம் கோரி அவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியால் 10க்கும் மேற்பட்ட சத்துணவுப் பணியாளர் சங்கங்களை ஒன்றுபடவிடாமல் தடுத்து பிளவுபடுத்தி அந்தக் கோரிக்கையை நிராகரித்து வருகிறது அதிமுக ஆட்சி.

30 ஆயிரம் சத்துணவுக் காலிப் பணியிடங்களை ஆண்டுக் கணக்கில் நிரப்பாமல் வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் கூர்ந்து நோக்குகையில், பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்த அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை என்பதே தெளிவாகிறது.

இது சும்மாவேனும் அவ்வப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விடும் அறிக்கையிலிருந்தே தெரிகிறது. பள்ளி இன்ன தேதிக்கு தவறாமல் திறக்கப்படும் என்று அறிக்கை விடுவார். ஆனால் திறக்கப்பட்டு மாதக்கணக்கில் ஆகியும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படாது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை மூடக்கூடாது என்று அரசு கறாராக அறிவுறுத்தியுள்ளது என்பார். அதேநேரம் 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி 800 பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகும். மேலும், மூத்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி ஒன்றை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உருக்கமான வேண்டுகோளும் வெளியிடப்படும்.

இதையெல்லாம் பார்க்கும்போது, பள்ளிக் கல்வித் துறையின் போக்கும் நோக்கும் மோடியை அடியொற்றியே இருப்பது புரிகிறது. அதனால்தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்கிறது. மேல்சாதியர் தவிர, மொத்தத் தமிழருக்கும் கல்வி மறுக்கப்பட்டிருந்த, அந்த 19ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்திற்கு நம்மைத் தள்ளும் மோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித் துறை?

இல்லையென்றால் அரசுப் பள்ளிகளைப் படிப்படியாக மூடி வருவதேன்? அங்கன்வாடி - சத்துணவுக் காலிப் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?'' என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x