Published : 14 Jul 2019 03:45 PM
Last Updated : 14 Jul 2019 03:45 PM

இந்தியாவுக்கு இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள், 20 லட்சம் செவிலியர்கள் தேவை: குடியரசு துணைத் தலைவர்  பேச்சு

தகுதியான மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை கவலையளிக்கிறது. தற்போதைய நிலையில், நாட்டில் ஆறு லட்சம் மருத்துவர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.

சென்னையில் எம்ஜிஎம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை இன்று வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். இத்திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மருத்துவமனையைத் திறந்து வைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

''நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சுகாதாரம் தொடர்பான பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் அனைத்து அரசுகளும், சுகாதாரம், மக்கள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகின்றன. இந்தியர்களின் சராசரி வாழ்நாள் 69-ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று நோய்கள் அறவே ஒழிக்கப்பட்டுள்ளன.

நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மேம்பட்ட சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ததன் மூலம், ஆரோக்கியம் மேம்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் நாடு இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சுகாதாரத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதது, மருத்துவர்-நோயாளிகள் விகிதாச்சாரக் குறைவு, மக்கள் வருமானத்தை மீறி மருத்துவ செலவு செய்ய வேண்டிய நிலை, கிராமப் பகுதிகளில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாதது, சுகாதார காப்பீடு திட்டம் அதிக மக்களைச் சென்றடையாதது மற்றும் தடுப்பு மருத்துவ குறைபாடு போன்றவை சவால்களாக உள்ளன.

நகரப்பகுதிகளில் கிடைக்கும் மருத்துவ வசதிகள், கிராமப் பகுதிகளை இன்னும் சென்றடையவில்லை. இந்தக் குறைபாட்டைக் களைய தனியார் துறையினர் கிராமப் பகுதிகளிலும், தொலைதூரப் பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

நவீன சுகாதார வசதிகள் கிராமப்பகுதிகளுக்குச் சென்றடைய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் தனியார் பங்களிப்பும் அவசியம். தகுதியான மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை கவலையளிக்கிறது. தற்போதைய நிலையில், நாட்டில் ஆறு லட்சம் மருத்துவர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

தரமான மருத்துவ சிகிச்சைகள், குறைவான கட்டணத்தில் கிடைக்கச் செய்ய, தனியார் துறையினர் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த தொடக்க மற்றும் இரண்டாம் நிலை சுகாதார சேவை மையங்களை அமைப்பதில் அரசு, தனியார் பங்களிப்பு அவசியம்.

மக்கள் தங்கள் வருவாய்க்கு மீறி மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவு செய்ய வேண்டியிருப்பதால், கடன் சுமைக்கு ஆளாகின்றனர். புற்றுநோய், நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்காக மக்கள் அதிக அளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொருவருக்கும் உலகத்தரத்திலான சிகிச்சை வசதிகள் கிடைக்கச் செய்வதன் மூலமே, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட முடியும்.

நாட்டிலுள்ள ஏழை மற்றும் பரம ஏழைகளான பத்து கோடி குடும்பங்களுக்கு தரமான சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் சுகாதார காப்பீட்டு வசதி செய்து தரப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது,  பச்சிளங் குழந்தைகள் மற்றும் பிரசவ கால இறப்பு விகிதங்கள் வெகுவாக குறைந்துள்ளன. ஹெச்ஐவி மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் 2017 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 61 சதவீதம், மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்களால் ஏற்படுகிறது.

உலக மக்கள் தொகையில் 6 சதவீத அளவிற்கு உள்ள இந்திய மக்களுக்கு சுகாதார சேவைகளை அளிப்பது சவாலாக உள்ளது. இதனை சமாளிக்க மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டியது அவசியம்''.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x