Published : 14 Jul 2019 11:38 AM
Last Updated : 14 Jul 2019 11:38 AM

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்:  குடியரசுத் தலைவருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியிருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தமிழ்நாட்டு மக்களும், சட்டப்பேரவையும் எந்த கோரிக்கையை முன்வைத்து 13 ஆண்டுகளாக காத்துக் கிடக்கின்றனரோ, அதே கோரிக்கையின் ஒரு பகுதியை குடியரசுத் தலைவரே வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

சென்னையில் நேற்று நடந்த டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர்,‘‘ சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியிலும், கேரள உயர் நீதிமன்றத்தில் மலையாள மொழியிலும் தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். குடியரசுத் தலைவரின் இந்த யோசனை மிகவும் சிறப்பானது ஆகும். மக்களிடம் நீதியைக் கொண்டு செல்வது மட்டும் முக்கியமல்ல.... அதை அவர்களுக்குப் புரியும் மொழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள குடியரசுத் தலைவர், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே தீர்ப்புகளை உள்ளூர் மொழிகளில் மாற்றி வழங்கும்படி தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவரை விட கூடுதல் தொலைநோக்குடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் இருந்தால் மட்டும் போதாது; உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையே உள்ளூர் மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதில் பாமகவின் பங்கு அதிகம்.

தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால், புதிய குடியரசுத் தலைவரின் கனவு நனவாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2)-வது பிரிவின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசின் சார்பில் முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தமிழக ஆளுநர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கியிருக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் கடமை ஆகும்.

ஆனால், கடந்த காலங்களில் இல்லாத நடைமுறையாக, தமிழகத்தின் இந்தக் கோரிக்கை குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்ட மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, அதைக் காரணம் காட்டி கோரிக்கையை நிராகரித்தது. இப்போது நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு எப்படியெல்லாம் தட்டிக்கழிக்கிறதோ, அதேபோல் தான் அப்போதும் உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய மத்திய அரசும் தட்டிக் கழித்தது.

கடந்த 13 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க மாற்றம் என்னவென்றால், உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட குடியரசுத் தலைவரும்,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் என்பது தான். இத்தகைய வாய்ப்பு அமைவது மிகவும் அதிசயம் ஆகும். தமிழகத்தின் கோரிக்கை என்பது குடியரசுத் தலைவர் கூறுவதை விட சற்று அதிகம் தான் என்றாலும், அது அரசியல் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய உரிமை ஆகும். இதற்கு முன் 348(2) ஆவது பிரிவின்படி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளது. அதனால், அம்மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதே உரிமை சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தீர்மானத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய அவர்கள் முன்வராத பட்சத்தில்  தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து சாதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x