Last Updated : 12 Jul, 2019 11:13 AM

 

Published : 12 Jul 2019 11:13 AM
Last Updated : 12 Jul 2019 11:13 AM

நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக உதவி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியை, அதே கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் 2018 ஏப்ரலில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மதுரை காமராஜ் கல்லூரி உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டதோடு பிப்ரவரி 27-ல் வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள், சிபிசிஐடி விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை.

மேலும், சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதித்த தடையையும் நீக்கி உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x