Published : 12 Jul 2019 11:07 AM
Last Updated : 12 Jul 2019 11:07 AM

சேலத்து மாம்பழம், பட்டாசுப் பாதுகாவலன்: பேரவையில் முதல்வர் பழனிசாமியை புகழ்ந்த அமைச்சர்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அடைமொழி வைத்து அமைச்சர்களும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் அழைத்து வருகின்றனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரைப் புகழ்ந்துவிட்டு, அமைச்சர்களும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் உரையைத் தொடங்குவது வழக்கமாக இருந்தது. அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். அவையில் முதல்வருக்குக் கொடுக்கும் அடைமொழிகள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற பால்வள மானியக் கோரிக்கையின் போது, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "முனுசாமி, கருப்பசாமி, குப்புசாமி என எல்லோரும் போற்றும் எங்கள் எடப்பாடி பழனிசாமி", என புகழ்ந்து பேசினார். மேலும், பட்டாசுத் தொழிலுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் பாதுகாக்கும் 'பட்டாசுப் பாதுகாவலன்' என குறிப்பிட்டார்.

அப்போது, "அனைத்து வித பட்டாசு உற்பத்தியாளர்களின் துயரங்களை அறிந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எந்தக் காலத்திலும் பட்டாசு உற்பத்தி நடைபெறும். பட்டாசுப் பாதுகாவலனாக முதல்வர் இருக்கும் வரை பட்டாசுத் தொழில் பாதிக்கப்படாது", என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

உயர் மின் கோபுரம் தொடர்பான பிரச்சினையை சட்டப்பேரவை திமுக உறுப்பினர் கவன ஈர்ப்புத் தீர்மானமாக கொண்டுவந்தார். அப்போது பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, "முதல்வர் பழனிசாமியை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்று சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். அவர் ஜெயலலிதாவை விட மேலானவர்", என பேசினார்.

மேலும், சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர் இன்பதுரை, "முதல்வர் பழனிசாமி பணக்காரர்கள் கைகளில் உள்ள ஐபோன் இல்லை. அனைவரது கைகளிலும் இருக்கும் ஆண்ட்ராய்டு போன்", என பேசினார்.

இதேபோன்று, 'சேலத்துத் தங்கம்', 'சேலத்து மாம்பழம்', 'இடைத்தேர்தலில் நவரத்தினங்களை வென்றவர்' என, பல்வேறு அடைமொழிகளை சேர்த்துப் பேசும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x