Last Updated : 12 Jul, 2019 10:02 AM

 

Published : 12 Jul 2019 10:02 AM
Last Updated : 12 Jul 2019 10:02 AM

ஆசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற சேலம் மாணவர்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள முத்தநாயக்கன் பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்  ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்று, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

புதூர்காடம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார். இவரது மனைவி உமாராணி. மகன்கள் சஞ்சய், ரவீன்.  வறட்சியால் பயிர்  சாகுபடியில் ஈடுபட முடியாமல், வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார் செல்வகுமார்.

தாரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் சஞ்சய், 7 வயது முதலே கராத்தே மீது ஆர்வம் கொண்டு, கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  ஆசிரியர் அர்ச்சுணனிடம் கராத்தே பயிற்சி பெற்ற சஞ்சய், மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் களமிறங்கி, பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளார். மாநில, தேசிய போட்டிகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், கோப்பைகளையும் குவித்துள்ளார்.

தேசிய அளவில் வெற்றி பெற்ற சஞ்சய், கடந்த ஜூன் மாதம்  மியான்மர் நாட்டில் நடந்த ஆசிய அளவிலான கராத்தே போட்டியில், இந்தியா சார்பில் கலந்துகொண்டார். இதில், தமிழகத்தில் இருந்து 12 பேர் உட்பட இந்திய அணியில் 24 பேர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான, 40-45 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் சஞ்சய். இதையடுத்து, ஜெர்மனியில் வரும் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் இந்த மாணவர்.

இதுகுறித்து மாணவர் சஞ்சய் கூறும்போது, “மாநில, தேசியப் போட்டிகளில் வென்றுள்ள நான், முதல்முறையாக ஆசியப் போட்டியில் வென்றதன் மூலம், ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், குடும்ப வறுமை காரணமாக,  இப்போட்டியில் பங்கேற்ற பொருளாதாரம் தடையாக இருக்கும் என்பதால், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, உதவுமாறு கோரிக்கை வைக்க உள்ளோம். உலக அளவிலான போட்டியில் பங்கேற்று சாதனை புரியும் வாய்ப்பு பெற்றுள்ள விளையாட்டு வீரர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி செய்து, ஊக்கமளிக்க முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x