Published : 11 Jul 2019 02:55 PM
Last Updated : 11 Jul 2019 02:55 PM

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்பவர்கள், ஒரே கோயில், ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா?- சீமான் கேள்வி

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுபவர்கள், ஒரே கோயில், ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சென்னை எழும்பூரில் சுதந்திரப் போராட்ட வீரர், அழகு முத்துக்கோன் குருபூஜை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதனை முன்னிட்டு அழகு முத்துக்கோனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி சீமான் அஞ்சலி செலுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''வைகோ எம்.பி. ஆவதால் சட்டத்தில்  ஓட்டை இருப்பதாக எச்.ராஜா விமர்சித்துள்ளார். அப்படி உள்ளதென்றால் அந்த ஓட்டையை அவர் அடைக்க வேண்டியதுதானே?

 

ஆட்சியில் இருப்பவர்கள்தான் ஆணவக் கொலைகளைத் தடுக்கவேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு ஆகியவற்றைக் கொண்டு வருகிறீர்கள். ஒரே குளம் எல்லோரும் குளிக்கலாம், ஒரே கோயில் எல்லோரும் உள்ளே செல்லலாம் என்று கொண்டு வரலாமே!

 

குடியரசுத் தலைவரே எல்லாக் கோயில்களுக்கும் உள்ளே செல்ல முடிவதில்லை. ஒரே சுடுகாடாக பொதுச் சுடுகாடு என்று எல்லோரையும் ஒரே இடத்தில் புதைக்கலாம். அதை உங்களால் கொண்டு வரமுடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார் சீமான்.

 

நாடு முழுவதற்கும் ஒரே குடும்ப அட்டை முறையைக் கொண்டுவர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஓராண்டு கெடு விதித்துள்ளது. இம்முறை முழுமையாக நடைமுறைக்கு வந்தால், பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகள் நாட்டில் எந்த மூலையிலும் மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும், இரண்டு குடும்ப அட்டை முறைக்கு முடிவுகட்ட முடியும் என்றும் உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x