Published : 08 Jul 2019 09:41 PM
Last Updated : 08 Jul 2019 09:41 PM

24 மணிநேரமும் திறந்திருக்கும் பார்: புகார் அளித்தவர் எண்ணை எதிர் தரப்பினரிடம் கொடுத்து மிரட்ட வைத்த போலீஸார்

சென்னை புழல் காவல் எல்லைப் பகுதியில் 24 மணி நேரமும் பார் திறந்திருப்பது குறித்து பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீஸார், ஒருகட்டத்தில் புகார் அளித்த வழக்கறிஞர் எண்ணையே எதிர் தரப்பினரிடம் கொடுத்துள்ளனர்.

சென்னை புழல் பகுதியில் வசிப்பவர் தேவராஜ். இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் புழல் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையையும் அதை ஒட்டியுள்ள பார் உள்ள பகுதியையும் தினந்தோறும் கடந்து செல்வது வழக்கம். இரவு பகல் பாராது பார் திறந்திருப்பதையும், எந்நேரமும் குடிமகன்கள் குடித்துவிட்டு அட்டகாசம் செய்வதையும் தேவராஜ் பார்த்துள்ளார்.

இதுகுறித்து அவர் புழல் காவல் நிலையத்தில் எழுத்து மூலம் பலமுறை புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீஸார் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் 100-க்கு போன் செய்து தேவராஜ் தகவல் தெரிவிக்க, கடுப்பான போலீஸார் அவரின் செல்போன் எண்ணை சம்பந்தப்பட்ட பார் தரப்பினருக்குக் கொடுத்துள்ளனர்.

பார் தரப்பினர் தேவராஜுக்கு போன் செய்து மிரட்ட, அவர் இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பார் தரப்பினர் தேவராஜை மிரட்டும் ஆடியோவை வாட்ஸ் அப்பில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

அந்த வாட்ஸ் அப் ஆடியோவில் தேவராஜை ஒருவர் போனில் அழைக்கிறார். கருணா என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ''ஏன் 100 எண்ணுக்கு அடிக்கடி போன் செய்கிறீர்கள், உங்களுக்கு என்னதான் பிரச்சினை, வாங்க பேசிக்கலாம்'' என்கிறார்.

''எனக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை. நீங்கள் போலீஸை கரக்ட் செய்துகொண்டு போங்க. என்னிடம் பேசாதீர்கள்'' என்றார் தேவராஜ்.

அதற்கு எதிர்முனையில், ''அப்புறம் எதற்கு சார் போன் செய்து போலீஸில் சொல்கிறீர்கள். பெரிய மனுஷன் செய்கிற செயலா இது'' என அவர் கேட்கிறார்.

''ஏம்பா நீங்க சட்டத்துக்கு விரோதமாக பார் நடத்திக்கொண்டு என்னை கேள்வி கேட்கிறீர்களா?'' என தேவராஜ் கேட்கிறார்.

''நாங்க மட்டுமா நடத்துகிறோம், தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் நடக்கிறது. எங்களை மட்டும் வந்து நடத்த வேணாம்னு சொல்கிறாயே. இந்த பார் யாருக்குச் சொந்தம் தெரியுமா? நாங்க மூடிவிட்டால் பக்கத்து பார்ல போய் குடிக்கப் போகிறான்'' என்று எதிர்முனை நபர் நியாயப்படுத்துகிறார். பார் ஆளும் கட்சிப் பிரமுகருக்குச் சொந்தமானது என்றும் கூறுகிறார்.

மேலும், ''நீங்க எதுக்கு 100 கால்ஸ் போடுகிறீர்கள். எங்ககிட்ட வாங்க நேரா பேசுங்க'' என்று மிரட்டுகிறார்.

''நீங்க எதுக்குத் தேவை இல்லாமல் பேசுகிறீர்கள்'' என தேவராஜ் கேட்க, ''உங்களைத்தானே சொல்கிறார்கள், கட்டுப்பாட்டறையில் உங்களைத்தானே சொல்கிறார்கள்'' என அந்த நபர் மீண்டும் சொல்கிறார்.

இதுகுறித்து புகார் அளித்த வழக்கறிஞர் தேவராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

''விடியற்காலை 5 மணிக்கே பார் திறக்கப்படுகிறது. 24/7 என்கிற அளவில் விற்பனை நடக்கிறது. இதுபற்றி எழுத்துப்பூர்வமாக புழல் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. ஓவ்வொரு முறை அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் தொடர்ச்சியாகப் புகார் கொடுத்து வருகிறேன்.

போலீஸார் இம்மியளவும் நடவடிக்கை எடுப்பதில்லை. காசு வாங்குவது போய் விடுவது என்று இப்படியே நடக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் புகார் கொடுத்தவுடன் ஜிப்சி ஜீப்பில் ஓட்டுநர் வந்தார். உள்ளே போனார். கவர் ஒன்றைக் கொடுத்த பிறகு போய்விட்டார். பின்னர் மீண்டும் நான் 100-க்கு போன் செய்தேன். மீண்டும் ஒரு போலீஸ் வந்தார். அவரும் யாரையோ பார்த்தார், போய்விட்டார். இதையும் கன்ட்ரோல் ரூமுக்கு அழைத்து என்னதான் நடக்குது என்று கேட்டேன். இரவு 11 மணிவரை இந்தப் பிரச்சினை ஓடுகிறது.

நாளை காலையில் பாருங்கள் எப்படி நடவடிக்கை இருக்கு என்று கன்ட்ரோல் ரூமில் சொல்கிறார்கள். ஆனால், காலையில் ஒரு நடவடிக்கையும் இல்லை. மீண்டும் கன்ட்ரோல் ரூமில் கேட்டால், அதன் பின்னர் எனக்குத் தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வருகின்றன.

கருணா என்கிற நபர் போன் செய்து மிரட்டுகிறார். கன்ட்ரோல் ரூமில் உங்கள் நம்பரைக் கொடுத்தார்கள் என்று சொல்லி மிரட்டுகிறார்.

கன்ட்ரோல் ரூமில் அப்படி செல்போன் எண்ணைக் கொடுக்க மாட்டார்கள். புழல் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் நம்பரைக் கொடுத்து புகார் வந்தது, நடவடிக்கை எடுங்கள் என்பார்கள். புழல் ஸ்டேஷனில்தான் யாரோ ஒரு போலீஸ் என் நம்பரை அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.

நான் இதுகுறித்து அனைத்து விவரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்''.

இவ்வாறு தேவராஜ் தெரிவித்தார்.   

இதுகுறித்து விவரம் அறிய கன்ட்ரோல் ரூம் துணை ஆணையர் சாமிநாதனிடம் கேட்டபோது, “அதுகுறித்து தனக்கு எதுவும் தகவல் வரவில்லை. கன்ட்ரோல் ரூமிலிருந்து அவ்வாறு நம்பரைக் கொடுக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் நான் விசாரணை நடத்துகிறேன்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து புழல் காவல் ஆய்வாளரைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x