Published : 08 Jul 2019 07:57 PM
Last Updated : 08 Jul 2019 07:57 PM

கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்: மார்க்சிஸ்ட் கருத்து

நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் இப்பிரிவினருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்ட ரீதியான நிர்ப்பந்தம் ஏதுமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

“1.சமூகத்தில் நிலவுகிற பொருளாதார, சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி சமத்துவ வாழ்வை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய அம்சமாக சமூக நீதி கோட்பாடு கருதப்பட வேண்டும்.

ஆனால், இச்சமூக நீதி கோட்பாடு பொதுவாக இட ஒதுக்கீடு என்ற வகையில் மட்டும் சுருக்கப்பட்டு விடுகிறது. மண்டல் கமிஷன் குறிப்பிட்டுள்ளதைப் போல இட ஒதுக்கீடு என்பதோடு நிலமற்றவர்களுக்கு நில விநியோகம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றையும் நிறைவேற்றுவதன் மூலமே முழுமையான சமூக நீதியை நிலைநாட்ட இயலும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

2. அமலாக்கப்பட்டு வரும் உலகமய, தாராளமயக் கொள்கைகளின் காரணமாக அரசு வேலை வாய்ப்புகள் சுருங்குவதும், காலியிடங்கள் நிரப்பப்படாமல் நீடிப்பதும், தனியார்மயம் அதிகரிப்பதினாலும் இட ஒதுக்கீடு கோட்பாடு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

எனவே, காலியிடங்களை நிரப்புவது, அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது, பொதுத்துறையைப் பாதுகாப்பது உள்ளிட்டவை சமூக நீதிக்கான போராட்டத்தில் பிரிக்க முடியாத அங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல மதம் மாறிய தலித் கிறித்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்த விரும்புகிறோம்.

3.மருத்துவக் கல்வி இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமலாக்க மறுப்பது சட்ட விரோதமானதாகும்.

எனவே, மேற்கண்ட அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு கட்டாயம் அமலாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

4. பொருளாதாரத்தில் நலிந்த இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை மத்திய அரசு (124-வது சட்டத்திருத்தம்) நிறைவேற்றியது.

இச்சட்டத் திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதே நேரத்தில், இதனை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்துக் கட்சிகளோடு கலந்து பேசி கருத்தொற்றுமையோடு நிறைவேற்றுவதற்கு மாறாக அவசர கதியில் அரசியல் ஆதாய நோக்கோடு மத்திய பாஜக அரசு நிறைவேற்றியதை நாடாளுமன்றத்தில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போதே எங்கள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

5. இச்சட்டத்திருத்தத்தையொட்டி தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் உள்ளிட்ட பொருளாதார வரம்பு என்பது நலிந்தோருக்கான வரம்பாக இருக்க முடியாது. இப்பொருளாதார வரம்பை தமிழகத்தில் குறைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

6. பொருளாதாரத்தில் நலிந்த இதர பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டினை அமலாக்கும் போது ஏற்கெனவே தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டு கோட்பாட்டிற்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.

7. அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16-க்கு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை ((Subject to a maximum of 10 percent) இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் இப்பிரிவினருக்கு 10 சதவிகித அளவிற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்ட ரீதியான நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை தமிழக அரசின் கவனத்திற்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

8. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரபூர்வமற்ற தகவலின் படி ஏறக்குறைய 95 சதவீத மக்கள் இட ஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகித மக்கள் மட்டுமே இட ஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை என விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, இதுவரை இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய வேண்டும். அம்மக்கள் தொகை எத்தனை சதவீதம் என கணக்கிட்டு அதில் சரிபாதி சதமான அளவு இப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

9. பொதுவாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இதுவரை இல்லை என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இதே அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற, இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டு விகிதத்தைக் கணக்கிட்டு அமலாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

10. தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எவ்வகையிலும் பாதிப்பில்லாமல் கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று மேலே குறிப்பிட்டுள்ள விகிதப்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டினைச் செயல்படுத்தலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்''.

இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x