Published : 08 Jul 2019 07:24 PM
Last Updated : 08 Jul 2019 07:24 PM

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது பொருளாதார இட ஒதுக்கீடு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

நம் மாநிலத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை அடியோடு ரத்து செய்யும் உள் நோக்கத்துடன் தான் இந்தப் பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

சென்னயில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

“சமூக நீதிக் கொள்கைக்கு கிஞ்சிற்றும் சேதாரமில்லாமலும், நீர்த்துப் போகாமலும், காப்பாற்றுவதற்காக நாமெல்லாம் இன்று இங்கே கூடியிருக்கிறோம்.

சமூக நீதியின் ஊற்றுக்கண்ணாக - இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக, முன்னோடியாக விளங்குகிறது தமிழகம்.

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குகிறது. கம்யூனல் ஜி.ஓ மூலம் சாதி அடிப்படையில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு - அந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு செம்பகம் துரைராஜன் வழக்கு மூலம் ஆபத்து வந்த போது தமிழகமே கொந்தளித்தது.

1951-ல் வந்த அந்த ஆபத்தை எதிர்த்து, பெரியார், அண்ணா ஆகியோர் தமிழகத்தில் பெரும் போராட்டத்தினை நடத்தினர். காமராஜர் அன்று பிரதமராக இருந்த நேருவுக்கு அரசியல் அழுத்தத்தைக் கொடுத்தார்.

அதன் காரணமாக, நேரு முன்வந்து இந்திய அரசியல் சட்டத்தில் 1951-ம் ஆண்டு, முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். இந்திய அரசியல், சட்டம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பொதிந்திருக்கும் சமூக நீதியை நிலைநாட்ட, முதன்முதலில் திருத்தப்பட்டது என்பதும் - அது தமிழகத்தின் போர்க் குரலால் நிகழ்ந்தது என்பதும் வரலாறு.

அந்தத் திருத்தத்தின் மூலம், அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்ட 15 (4) என்ற புதிய பிரிவில் சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் (Socially and Educationally) என்ற சொற்றொடர்தான் இணைக்கப்பட்டது.

அரசியல் சட்டத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளின்படி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்று தெளிவாக இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என்று எந்த சொற்றொடரும் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல - இந்திய அளவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சமூக நீதி மட்டுமே அடிப்படை அம்சம் (Basic Structure) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, காமராஜரோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ ஏன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவோ இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

7.6.1971-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக முதல்வர் கலைஞரால் உயர்த்தப்பட்டது. அதே அரசு ஆணையில், பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு, 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 1.2.1980 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். 1989-ல் முதல்வர் கலைஞர் 28.3.1989 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு  20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளித்தார். பட்டியல் இன மக்களுக்கு 18 சதவீதம் இருப்பது போல், பழங்குடியினர் சமுதாயத்திற்குத் தனியாக 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தார்.

இப்படி பல்வேறு காலகட்டங்களில் உயர்த்தப்பட்டு, இன்றைக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் சட்ட ரீதியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் மண்டல் வழக்கில் 19.11.1992 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  வெளிவந்தது. "கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆகவே தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில், மசோதா கொண்டு வரப்பட்டு, 31.12.1993 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 1994-ம் ஆண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு சேர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆகவே 69% இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமராக  இருந்த சமூக நீதிக் காவலர வி.பி.சிங், மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றோம். உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்த பிறகும், இன்றைக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசின் எந்தத் துறையிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

 17.1.2019 அன்று பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியின்படி, மத்தியப் பல்கலைக் கழகங்கள் முழுக்க முழுக்க மேல்தட்டு வகுப்பினரின் சொர்க்கபுரியாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. பத்திரிகை வெளியிட்டுள்ள புள்ளி  விவரங்களின் அடிப்படையில் பார்த்தால்,  மத்திய அரசில் உள்ள 71 துறைகளில்,  பிற்படுத்தப்பட்ட  சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள் 14.94 சதவீதம் மட்டுமே பணி புரிகிறார்கள்.

மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின் நிலை 30 வருடங்கள் கழிந்த பிறகும் இதுதான். ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சிதைந்து கிடக்கிறது. இந்த நிலையில்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு, ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை - அவசர அவசரமாகக் கொண்டு வந்து - தேர்தலுக்கு  முன்பு நிறைவேற்றியது.

இந்த நேரத்தில் ஒரு கருத்தை முன் வைக்க விரும்புகிறேன். முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டபோதே சிலர் பொருளாதார ரீதியாக (Economically) என்ற சொற்றொடரும் இடம் பெற வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால், அதனை அன்று பிரதமராக இருந்த நேருவும், அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ''சமூகரீதியாக என்ற வார்த்தை பரந்துபட்ட பல பொருள்களை உள்ளடக்கிய விரிவானதொரு சொல்லாகும்'' (‘Socially' is a much wider word including many things) என்று பண்டித நேரு அன்றைக்கே விளக்கம் அளித்தார்.

ஆகவே சுதந்திர இந்தியாவில் பதவியேற்ற 15 பிரதமர்களில் 14 பிரதமர்கள், சமூக-கல்வி நிலைகளில்  பிற்படுத்தப்பட்டோர்க்கும், தாழ்த்தப்பட்டோர்க்கும், பழங்குடியினர்க்கும், அரசியல் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு மாறாகவே, ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, "பொருளாதார ரீதியாக" என்று ஒரு புதிய பிரிவு இணைக்கப் பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் புகுந்திருக்கும் இந்த "பொருளாதாரப் பிரிவு", இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்து விடும். அந்த உண்மையை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இட ஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல என்பது ஒரு தீர்ப்பில் அல்ல, பல்வேறு உச்ச நீதிமன்றத்  தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், பட்டியல் இன, பழங்குடியின மக்களுக்கும் அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

அந்த உரிமை பறிக்கப்பட தமிழக அரசு இடமளித்து விடக்கூடாது. நாம் "50 சதவீத இட ஒதுக்கீடு" ; "கிரிமி லேயர் நீக்கம்";  “இடஒதுக்கீட்டின் அளவை மாநிலங்களே முடிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்”  என்று கோரிக்கைகளை வைத்துள்ள நிலையில், இருக்கின்ற 27 சதவீத இட ஒதுக்கீட்டையும்  பறிக்கும்  விதத்தில் - முன்னேறிய  பிரிவினருக்கான  இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் திமுக கடுமையாக எதிர்த்துள்ளது; எதிர்த்து வாக்கும் அளித்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தமட்டில் - இந்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்த்திருக்கிறார்கள். மசோதாவின் மீதான விவாதத்தில் 9.1.2019 அன்று, மாநிலங்களவையில் பேசுகின்ற நேரத்தில் அதிமுக உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன் பின்வரும் வாதங்களை வைத்துள்ளார்:-

* சமூகத்தில் முன்னேறியவர்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

* பத்து சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்ட விரோதமானது.

* இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பொருளாதார அளவு கோலை அறிமுகப்படுத்த முடியாது.

* பத்து சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒரு திருத்த மசோதாவை இந்த அவையில் தாக்கல் செய்து தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும். இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றே அனைவரும் கருதுகிறார்கள்.

இந்நிலையில் "முன்னேறிய சமுதாயத்திற்கு பத்து சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தினால் தமிழகத்திற்கு “25 சதவீத இடங்களை அதிகரிக்கிறோம்" என்பதை நம்பி, திராவிட இயக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைக்கும் உச்ச நீதிமன்ற அனுமதியுடன்தான், நாம் ஒவ்வொரு வருடமும், 69 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்த்து வருகிறோம். அதிக இடங்கள் கொடுப்பதால் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு லாபம் வந்து விடப் போகிறதா? அதுவும் இல்லை.

25 சதவீதம் அதிக இடங்களைக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். உதாரணமாக தற்போது தமிழகத்தில் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.  அவற்றில் 200 இடங்களுக்கு மேலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா விதிப்படி இடங்களை அதிகரிக்க முடியாது.

ஆகவே சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் உயர்த்தப்படாது. இந்த நான்கு கல்லூரிகளின் இடங்களைக் கழித்து விட்டால் மீதமுள்ள 20 கல்லூரிகளில் 2,350 இடங்கள் இருக்கிறது. அதில் 25 சதவீதம் என்றால் 587 இடங்கள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படும்.

ஆக மொத்தத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு கல்லூரிகளில் 1,000 இடங்கள், பிற 20 கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட இடங்களையும் சேர்த்து 2,937 இடங்கள் மட்டுமே. இந்த இரண்டையும் சேர்த்தால் வரும் 3,937 இடங்களில்  பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதாவது ஒதுக்கப்படும் 587 இடங்களில் 393 இடங்கள் உயர் வகுப்பினருக்குப் போய்விடும்.

மீதமுள்ள 134 இடங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கிடைக்கும். ஆகவே 120-ஐக் கொடுத்து 393-ஐ நம்மிடமிருந்து பறித்துக் கொள்ள திட்டமிடப்படுகிறது.

இந்த பத்து சதவீத இடஒதுக்கீடு இல்லையென்றால், இந்த 393 இடங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் தாராளமாக இன்னும் 120 பேருக்கு மேல் அதிகமாகவே தேர்வு பெறுவார்கள். மருத்துவக் கல்லூரிகளில் படிப்பார்கள்.

ஒரு கணக்குக்காகவே இதைச் சொல்கிறேன்.  இது சரி செய்யப்பட்டாலும், திராவிட இயக்கத்திற்குச் சம்மதம் இல்லை; சம்பந்தமும் இல்லை. எந்தவிதமான "ஏமாற்று வாக்குறுதி"க்கும் நம் முன்னோர் நமக்கு வழங்கியிருக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பலி கொடுத்துவிடக் கூடாது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்தில் உள்ள ஏழைகள் அறவே போட்டியிட முடியாது. ஆனால், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளும் போட்டியிடும் வகையில் தமிழகத்தில் "பொது பிரிவுக்கான" 31 சதவீத இட ஒதுக்கீடு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரும் போட்டியிட்டு தங்களுக்குரிய இடங்களை, வேலைவாய்ப்புகளை இணக்கமான சூழ்நிலையில் அமைதியாகப் பெற்று வருகிறார்கள்.

ஏற்கனவே நீட் தேர்வினால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத அனிதா உள்ளிட்ட ஐந்து மாணவியரைப் பறிகொடுத்திருக்கிறோம். மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ்நாட்டில் பத்து சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் அளவுக்கு முன்னேறிய வகுப்பினர் அதிக சதவீதம் இல்லை. ஆகவே நம் மாநிலத்திற்கு பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு பொருந்தாது.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைத் தீர்மானிக்கும் வரையறை நிச்சயமற்றது. அந்த வரையறையை வைத்து இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியைச் சீர்குலைக்கும் இந்த இட ஒதுக்கீடு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்,  நம் மாநிலத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை அடியோடு ரத்து செய்யும் உள் நோக்கத்துடன் தான் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகவே "முன்னேறியவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறோம்" என்று கூறப்படுவதற்கு நாம் செவி சாய்க்கக் கூடாது. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு காலமாக நாம் கட்டிக் காப்பாற்றி வரும் சமூக நீதிக்குக் களங்கம் கற்பிக்க அனுமதிக்கக் கூடாது. "பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு"என்று கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் ஆணையை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் மறைந்த ரத்னவேல் பாண்டியன், "பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது" என்று தீர்ப்பளித்துள்ளார். இன்னொரு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன்ரெட்டி , "சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிடக் கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. ஆகவே ஒருவரின் வருமானம் அல்லது சொத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது" என்று தெளிவுபடத் தீர்ப்பளித்துள்ளார்.

மண்டல் கமிஷன் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி கனியா அவர்கள், "வருமானம் மற்றும் சொத்துகள் வைத்திருப்பதின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது" என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாகவும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராகவும், "பொருளாதாரத்தில் பின்தங்கியோர்" என்று, 124-வது அரசியல் சட்டத் திருத்தம் மூலம், இப்படியொரு இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்திருப்பது ஆச்சரியமானது.

சமூக நீதியின் பிறப்பிடமாக இருக்கும் தமிழகத்தில், சமூக நீதியின் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெரிய எதிர்க்கட்சியாகிய எனக்கும், ஆளுங்கட்சியாகிய உங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, மருத்துவக் கல்லூரிகளில் பத்து சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த முடியாது என்பதை தமிழகம் தெரிவித்து  - 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு கொள்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் புதிய முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே, திராவிட இயக்கத்தின் மூலாதாரமான சமூக நீதியை நிலைநாட்ட, இந்த அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக உணர்வுப்பூர்வமாக முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்” .

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x