Published : 08 Jul 2019 06:06 PM
Last Updated : 08 Jul 2019 06:06 PM

திட்டத்தைத் தொடங்கிவிட்டு பாதியில் விட்டுப் போவது திமுகவின் வழக்கம்: பேரவையில் முதல்வர் குற்றச்சாட்டு

பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறைகளில் புதுப் பிரிவை ஏற்படுத்தி கட்டப்படுகின்ற பணியின் தரத்தை சோதனை செய்த பின்னர் தான் அதற்குண்டான தொகை வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.

பாதாள சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்படுகிற சாலைகளைச் சீரமைப்பதில்லை என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பேரவையில் பேசியதாவது:

“ பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக குழியைத் தோண்டிவிட்டு மூடவில்லை என்று உறுப்பினர் சொன்னார். திமுக ஆட்சியிலே, சேலத்திலே பாதாள சாக்கடைத் திட்டத்தை எடுத்தது. பாதியிலே விட்டுவிட்டுப் போய்விட்டது. அந்தப் பாதாள சாக்கடைக்காக எல்லா வீதிகளிலுமே குழாய்களைப் பதிப்பதற்காக குழி தோண்டினார்கள். பிறகு அதற்கு சாலையை அமைக்க வேண்டும். சாலையை அமைப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலேயே போய்விட்டது.

எல்லா சாலைகளுமே சிதைந்து போய் கிடந்தது. இப்பொழுது தமிழக அரசு தான், 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சேலத்திலே திமுக ஆட்சிக் காலத்திலே போடப்பட்ட அந்த பாதாள சாக்கடைத் திட்டத்தில் எல்லாம், இப்பொழுது நாங்கள் தான் சாலையை போட்டுக் கொண்டு இருக்கிறோம். ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் அப்படித்தான்.

இதேபோல பல மாநகராட்சிகளில் திமுக ஆட்சிக் காலத்திலே பாதாள சாக்கடைத் திட்டத்தைத் தொடங்கிவிட்டு, பாதியிலே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். டெண்டர் எடுக்கிறார்கள். சப்-கான்ட்டிராக்ட் விட்டுவிட்டார்கள். சப்-கான்ட்ராக்ட் எல்லாம் சரியாக வேலை செய்யவில்லை.  எல்லா ஆட்சியிலும் இப்படிப்பட்ட நிலைமை தான் இருக்கிறது.

ஏன் என்றால் டெண்டர் விடும்போது தகுதியானவர் யாராக இருந்தாலும் டெண்டர் விட்டுதான் ஆகவேண்டும். பிறகு வேலை செய்வது அவருடைய நிலைமையைப் பொறுத்தது தான். சில நேரத்திலே, டெண்டர் எடுத்து விடுவார்கள். நிதிநிலை சரியில்லை என்றால் பாதியிலே விட்டுவிடுகிறார்கள்.

அப்படித்தான் சேலம் மாநகராட்சியிலும் திமுக ஆட்சிக் காலத்திலே டெண்டர் எடுத்து பாதி வேலை செய்துவிட்டு பாதி வேலை நிறைவேறாமலே பாதியிலே விட்டுவிட்டு போய்விட்டார்கள். மீண்டும் அதை ரி-டெண்டர் கொண்டு வந்து, அந்தப் பணியைச் செய்து கொண்டு இருக்கிறோம். ஆகவே, திட்டம் போடும்போது அந்தத் திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கருத்தை தான் நான் சொன்னேன்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சென்டர் மீடியன் இருப்பதாகவும் அதிலே சரியான பணி செய்யவில்லை என்றும் ஒரு கருத்தைச் சொல்கிறார். நீங்கள் எந்த இடம் என்று குறிப்பிட்டுச் சொன்னால், ஆய்வு செய்யப்பட்டு, அதில் ஏதாவது தவறு இருந்தால் அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏன் என்று சொன்னால், நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரைக்கும், தரம் சோதனை செய்வதற்கு என்று தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, ஒரு பணி முடிகின்றபோது, தரம் சோதனை செய்து தான் அந்தப் பணிக்கு உண்டான ஒப்பந்தத் தொகை வழங்கப்படும். பொதுப்பணித் துறையிலும் கூட இதுவரைக்கும் தரம் சோதனை செய்வதற்கு நியமிக்கப்படவில்லை. இப்பொழுது புதுப் பிரிவை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். பொதுப் பணித் துறையில் கட்டப்படுகின்ற பணியும் தரம் சோதனை செய்த பின்னர் தான் அதற்குண்டான தொகை வழங்க வேண்டும் என்று அறிவித்திருக்கின்றோம்.

அதில் ஏதாவது தவறு இருந்தால், நிச்சயமாக அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x