Published : 08 Jul 2019 02:59 PM
Last Updated : 08 Jul 2019 02:59 PM

நீட் தேர்வை நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஸ்டாலின் பேச்சு

நீட் தேர்விற்கு விலக்கு அளிக்காமல், தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படும் வகையில் மத்திய ஆளும் அரசு செயல்பட்டு கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைத்துள்ளது.உடனடியாக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று, தமிழகத்தில் நடைபெறும் நீட் தேர்விற்கான விலக்கு குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசியதாவது:

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்படக்கூடிய நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுவிலக்கு அளிக்க வேண்டுமென்று இதே சட்டபேரவையில் கடந்த 01-02-2017 அன்று 2 மசோதாக்கள் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஏகமனதாக ஒருமித்தக் கருத்தோடு நிறைவேற்றப்பட்டு அந்த இரு மசோதாக்களை நாம் அனுப்பிவைத்தோம்.

அந்த இரண்டு மசோதாக்களையும் தமிழகத்தின் ஆளுநர் 18-02-2017 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்திருக்கின்றார். அரசியல் சட்டப் பிரிவு 246-ன் கீழ் நாடாளுமன்ற சட்டம் இயற்றும் ஒன்றியப் பட்டியல் யூனியன் லிஸ்ட், மாநில சட்டமன்ற சட்டம் இயற்றும் ஸ்டேட் லிஸ்ட், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை ஆகியவை சட்டம் இயற்றும் அதிகாரமுள்ள ஒத்திசைவு பட்டியல் Concurrent List என்று வகைப்படுத்தி சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த சட்டம் இயற்றும் இந்த அதிகாரம் தான் கூட்டாட்சியின் தத்துவமாக விளங்கிக்கொண்டிருக்கின்றது. அது நம்முடைய அரசியல் சட்டத்தின் போற்றத்தக்க மாண்பாக கருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மருத்துவக்கல்வியைப் பொறுத்தவரையில் Concurrent List 25-ல் Entry-யாக இருக்கின்றது.

எனவே, மத்திய அரசுக்கு எப்படி சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கின்றதோ அதேபோல் இந்த சட்டப்பேரவைக்கும் சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் நிறைவாக இருக்கின்றது. அதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு Concurrent List-ல் உள்ள பொருள் குறித்தும் சட்டம் இயற்றும் அதிகாரம் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 254/2ன் கீழ்  வழங்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு இணையாக மாநில சட்டப்பேரவையின் இறையாண்மையை அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் இறையாண்மையை சட்டம் இயற்றக்கூடிய அதிகாரத்தை அரசியல் சட்டம் வகுத்து கொடுத்திருக்கக்கூடிய கூட்டாட்சி முறையை கேள்விக்குறியாக்கக்கூடிய வகையில் நீட் மசோதாக்கள் 27 மாதங்களாக கிடப்பில் உறங்கிக் கொண்டிருந்திருக்கின்றது.

இத்தகைய நீண்ட நெடிய தாமதம், இதற்கு முன்பு இந்த வரலாற்றில் ஏற்பட்டிருக்கின்றதா என்பது சந்தேகத்திற்கு உரியதாக அமைந்திருக்கின்றது. நாம் எல்லோரும் நீட் விலக்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தாருங்கள் என்று மத்திய அரசை சட்டப்பேரவை மூலமாகவும், ஏன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எல்லாம் மௌனம் சாதித்திருக்கக்கூடிய பாஜக அரசு இப்பொழுது திடீரென்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழக நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன என்ற ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.

எனவே இது தமிழகத்தை ஒரு மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. மசோதாக்கள் நிராகரித்தது குறித்த தகவலை மாநில சட்டப்பேரவைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை கண்ணியம் கூட காணாமல் போயிருக்கிறது. அதுதான் உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கின்றது.

கூட்டுறவு கூட்டாட்சி என்று சொல்லிக்கொண்டே, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவமும் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றது. அரசமைப்பு சட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய அநீதி என்பதை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகின்றேன். எனவே, அரசியல் சட்டமைப்பு சட்டப்படி சட்டப்பேரவைக்கு இறையாண்மை அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கக்கூடிய சட்டம் இயற்றும் முக்கியமான அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே மாநில மக்கள் மன்றமாக விளங்கிக் கொண்டு இருக்கக்கூடிய இந்த சட்டப்பேரவை ஆணிவேர் இன்றைக்கு மாய்க்கப்பட்டிருக்கின்றது. மத்திய அரசின் இந்த வினோதமான செயல் மிகமிக கண்டனத்திற்கு உரியது என்பதை நான் இந்த அவையில் பதிவு செய்கின்றேன்.

குறிப்பாக நீட் தேர்வால் ஏற்பட்ட ஏமாற்றத்தால் மனம் ஒடிந்து போய் தமிழகத்தில் பல மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடிய கொடுமை, கண்ணீரை வரவழைக்கக்கூடிய கையறு நிலையில் சட்டமன்றத்தில் பிரதிபலிக்கப்பட்ட தமிழக மக்களின் ஆழமான உணர்வுகளை மத்திய பாஜக அரசு மதிக்க தவறி இருக்கின்றது.

எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடிய மசோதாக்கள் இரண்டிற்கும் உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி இந்த அவையில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். சட்டப்பேரவை சட்டம் இயற்றும் உயர்ந்த அதிகாரத்தை, சாதாரணமாக சிறுமைப்படுத்தி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அவமானம் செய்திருக்கக்கூடிய மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வந்து இந்த அவையில் ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும்.

மேலும், மக்களுடைய நலம் பேணவும் இந்த மாநிலத்தின் உணர்வை மதிக்கவும், அவர்களுடைய விருப்பத்தை எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் சட்டமன்றத்திற்கு இருக்கக்கூடிய இறையான்மையை பாதுகாத்திட சட்டப்பூர்வமான மாமருந்து தேடி தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தையும் அணுக வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

இதில் தாமதம் செய்தாலோ - தயக்கம் காட்டினாலோ வரலாற்றுப் பிழையை இழைத்தவர்கள் ஆவீர்கள். எதிர்கால ஜனநாயக சமூகம் இதனை மறக்காது மன்னிக்காது என்று எச்சரிக்கை செய்வது மட்டுமல்ல, இது குறித்த கண்டன தீர்மானத்தை இந்த அரசு உடனடியாக கொண்டு வரவேண்டும் என்பது மட்டுமல்ல உடனடியாக இதை உச்ச நீதிமன்றத்திற்கு இதனை கொண்டு செல்ல வேண்டும் என்று நான் அரசைக் கேட்டு அமர்கின்றேன்.

இங்கு நீட் பிரச்சினை குறித்து நான் கேட்ட கேள்விக்கு அதே போல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேட்ட கேள்விக்கும் இங்கு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கின்றார்கள். இங்கு நான் பதிவு செய்ய விரும்புவது காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது நீங்கள் தான் கூட்டணியில் இருந்தீர்கள் என்று பேசினீர்கள்.

திமுக இருந்த வரையில் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் திமுக ஆட்சி இருந்த வரையில் நீட் என்ற பிரச்சினை தமிழ்நாட்டில் நுழைய முடியாத அளவிற்கு கலைஞர் பார்த்துக்கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எப்படி உங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தீர்கள் என்பதை பதிவு செய்ததைப் போல எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தோம் என்பதை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றீர்கள் அதை நான் மறுக்கவில்லை. இன்றைக்கு பிரதமராக இருக்கக்கூடிய மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுது நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இன்றைக்கு பிரதமராக வந்ததற்குப் பிறகு அவரே இந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு மூலகாரணமாக இருந்து கொண்டிருக்கின்றார். இதையும் நீங்கள் பார்க்க வேண்டும் அதுதான் உண்மை.

அது மட்டுமல்ல இன்றைக்கு உயர்நீதிமன்றம், சட்டப்பேரவையில் நாம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்து இருக்கின்றது. எனவே நான் கேட்க விரும்புவது, உடனடியாக இதே சட்டமன்றத்தில் எந்த நம்பிக்கையோடு – எந்த ஒற்றுமையோடு - ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோமோ அதேபோல் நீங்களும் மிகுந்தளவு அழுத்தமாக இருக்க வேண்டும். நீங்களும் உங்கள் தேர்தல் அறிக்கையில் கூட வலியுறுத்துவோம் என்று தான் நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்.

நீங்களும் அதில் அழுத்தமாக இருக்கின்றீர்கள் அதை நாங்கள் மறுக்கவில்லை. எனவே இன்றைக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து உடனடியாக இதனை கண்டிக்கின்ற வகையில் ஒரு தீர்மானத்தை இந்த அவையில் நிறைவேற்றிட வேண்டும். அதேபோல் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சொல்லக்கூடிய நிலையை இந்த அரசு உருவாக்கிட வேண்டும்.

மத்திய அரசைக் கண்டித்து கண்டத் தீர்மானம் போட முடியாது என்பதை அவை முன்னிறுத்தி சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். வற்புறுத்தியாவது ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா. அவையின் இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டுவரவேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x