Published : 27 Jun 2019 12:00 AM
Last Updated : 27 Jun 2019 12:00 AM

ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகளால் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்ப்பதில் சிக்கல்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வனை சேர்ப்பதற்காக நடந்ததிரைமறைவுப் பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம் விதித்த நிபந்தனைகளால் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கட்சிமாறும் அவரது திட்டத்தை பலவீனப்படுத்தும் விதமாகவே, தினகரன் பற்றி அவர் பேசியஆடியோவை அமமுக வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேர பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேருவதற்கான பேச்சுவார்த்தையில் இருந்தார். ஆனால், அவரை முந்திக்கொண்டு, அவர்ஆவேசமாக தினகரனை பற்றிப் பேசிய ஆடியோவை அமமுவினர் வெளியிட்டு, அவர் கவுரவமாக அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக்கட்சியிலும் சேரவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால், திரிசங்கு நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளார்.

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வனை சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. முதல்வர் கே.பழனிசாமி தரப்பினர், தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்ப்பதற்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஒப்புதல் கேட்டுள்ளனர். அதற்கு அவர், "சேர்ப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தேர்தல் நேரத்தில் ஒரு கட்சி மீது பொதுவான விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், தங்கதமிழ்ச்செல்வன், என்னையும், என் குடும்பத்தையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார். சாதிரீதியாக என்னையும், அதிமுகவையும் மாவட்டத்தில் பலவீனப்படுத்தினார். அதை உடைத்து கட்சியை வெற்றிபெற வைக்க நான் எவ்வளவு செலவு செய்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அதனால், அவர் என்னுடைய கட்டுப்பாட்டில், எனக்குகீழ், மாவட்டத்தில் அரசியல் செய்வாரா?’’ என்று குறிப்பிட்டு அதற்கான சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.

அந்த நிபந்தனைகளை முதல்வர் பழனிசாமி தரப்பினர் தங்கதமிழ்ச்செல்வனிடம் கூறியுள்ளனர். இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்தை தங்க தமிழ்ச்செல்வன் சந்திக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். தினகரன் பற்றிய அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும், அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே கூறியுள்ளார். அதனால், தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்ப்பதற்கு முன் அவரை வைத்து தினகரனையும், அமமுகவையும் மேலும் பலவீனப்படுத்த அதிமுக தரப்பு திட்டமிட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x