Published : 26 Jun 2019 04:03 PM
Last Updated : 26 Jun 2019 04:03 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணையில் திருப்தியில்லை: மக்களவையில் கனிமொழி ஆவேசம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் ஒரு போலீஸார் பெயர்கூட இடம்பெறாததை சுட்டிக்காட்டி தனது அதிருப்தியை ஆவேசத்துடன் வெளிப்படுத்தினார் திமுக எம்.பி. கனிமொழி.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கனிமொழி.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஏற்பட்ட அதிருப்தி எதிர்பார்த்தபடி தூத்துக்குடியில் கனிமொழிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது.

இந்நிலையில் தனது தொகுதியின் பிரதான பிரச்சினைக்காக குரல்கொடுக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) மக்களவையில்  அவர் பேசினார்.

அப்போது அவர், "தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையே உலுக்கியது. 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.

13 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி பலியாகினர். தூத்துக்குடி வன்முறையில் மொத்தம் பலியானவர் எண்ணிக்கை 16. ஸ்னோலின் என்ற இளம்பென் உள்பட பலர் தங்கள் உயிரை இழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், 4 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் துப்பாக்கி சூடு நடைபெற்று ஓராண்டு கழிந்த பின்னரும்கூட, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டு 10 மாதங்கள் கழிந்து விட்ட நிலையிலும்கூட சிபிஐ இன்னும் விசாரணையை முடிக்கவில்லை.  தனது முதல் தகவல் அறிக்கையில் ஒரே ஒரு போலீஸார் பெயரைக்கூட சேர்க்கவில்லை.

விசாரணையின் போக்கு இப்படி இருந்தால்  தூத்துக்குடி மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எப்படி நம்புவார்கள்? தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து.  ஆனால் தமிழக அரசு சொன்னதை மட்டும் கேட்டுக்கொண்டு விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளும்கூட திருப்தியளிப்பதாக இல்லை. எனவே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், காயமடைந்தோர் மற்றும் கொல்லப்பட்டோருக்கு , நியாயம் கிடைக்கவேண்டும்" என்று  வலியுறுத்தினார்.

முன்னதாக இன்று (புதன்கிழமை) காலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கக்கோரி சிபிஐ இயக்குநர் சார்பில் டிஎஸ்பி ரவி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x