Last Updated : 25 Jun, 2019 05:05 PM

 

Published : 25 Jun 2019 05:05 PM
Last Updated : 25 Jun 2019 05:05 PM

கான்க்ரீட் சாலை மீது ஃபேவர் பிளாக்: கமிஷனுக்காக வேலை செய்கிறதா டி.கல்லுப்பட்டி பேரூராட்சி?

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் கான்க்ரீட் சாலை மீதே அவசர அவசரமாக ஃபேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

டி.கல்லுப்பட்டியில் உள்ள வீதிகளில் ஏற்கெனவே உள்ள கான்கிரீட் சாலை மீதே ரூ.1 கோடி செலவில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

இதனைக் கண்ட, அந்த ஊரைச் சேர்ந்த காந்திய இலக்கிய சங்க செயலாளர் அன்புசிவன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

மேலும், சட்டபஞ்சாயத்து இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தான் வசிக்கும் ராமுன்னி நகரைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் அந்தப் பகுதியில் மட்டும் ஃபேவர் பிளாக் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் சாலைப்பணி ஒப்பந்ததாரர் தரப்பினருக்கும், நியாயம் கேட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

விஷயம் மேலதிகாரிகளின் காதுகளுக்கு எட்டவே, பேரூராட்சி பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அந்தத் தெருவை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

அப்போது, "நல்ல நிலையில் உள்ள கான்க்ரீட் சாலையின் மீது ஃபேவர் பிளாக் பதித்து ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறீர்கள்? ஃபேவர் பிளாக் போடுவதன் நோக்கமே, மழைநீர் பூமிக்குள் இறங்குவதற்காகத்தான்.

ஆனால் கான்க்ரீட் சாலை மீது ஃபேவர் பிளாக் போட்டால் அந்த நோக்கம் எப்படி நிறைவேறும்? ஏற்கெனவே தெரு உயரமாக உள்ளது, இப்போது அதன் மீது ஃபேவர் பிளாக் பதிப்பதால் வீடுகள் பள்ளமாகவும், வீதி உயரமாகவும் மாறிவிட்டது.

வீட்டிற்குள் இருந்து படியேறித்தான் தெருவுக்கு வர முடிகிறது. சிலர் வீட்டிற்குள் நிறுத்தியுள்ள கார் உள்ளிட்ட வாகனங்களை வெளியே கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பேரூராட்சி பொறியாளரிடம் அன்புசிவன் உள்ளிட்டோர் வினவியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிமெண்ட் சாலையை பெயர்த்தெடுத்துவிட்டு, பேவர் பிளாக் பதிக்குமாறு அலுவலர்கள் அறிவுரை கூறிச்சென்றனர்.

ஆனாலும், லேசாக தெருவை கொத்திவிட்டு அப்படியே ஃபேவர் பிளாக் அமைத்துவிட்டார்கள்.

இந்நிலையில் "சாலை ஒப்பந்ததாரர்கள் கொடுக்கும் கமிஷனுக்காக பேரூராட்சி நிர்வாகம் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் வந்தால் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டியதிருக்கும் என்று அலுவலர்கள் வேகவேகமாக வேலையைச் செய்கிறார்கள்" என்று அன்புசிவன் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் சின்னச்சாமி பாண்டியனிடம் கேட்டபோது, "இவ்வூரில் சிமெண்ட் சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல இடங்களில் அவை சேதமாகிவிட்டதால், பொறியாளர்கள் ஆய்வு செய்துதான் ரூ.1 கோடியில் இதற்கென திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடக்கின்றன.

6 மாதத்திற்கு முன்பே டெண்டர் விடப்பட்டுவிட்டது. தேர்தல் காரணமாக தற்போது பணிகள் நடக்கின்றன. தெரு மக்கள் எல்லாம் ஒத்துழைக்கிறார்கள். அந்த ஒருவர் மட்டும் தன் சுயலாபத்திற்காக வேலையை தடுத்து நிறுத்துகிறார்" என்றார்.

பேரூராட்சி நிர்வாக அலுவலரின் விளக்கம் இத்தகையதாக இருந்தாலும்கூட, புதிதாக ஃபேவர் பிளாக் அமைப்பது என்றால் ஏற்கெனவே உள்ள கான்கிரீட் சாலையை பெயர்த்தெடுத்துவிட்டு அமைப்பது தானே சரி என்பதே அப்பகுதிவாசிகளின் கேள்வியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x