Last Updated : 25 Jun, 2019 04:41 PM

 

Published : 25 Jun 2019 04:41 PM
Last Updated : 25 Jun 2019 04:41 PM

கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை சீராய்வு செய்து புதிய வழிகாட்டுதல்களை உருவாக்குக: தலைமை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக சீராய்வு செய்து புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க தலைமை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் கடந்த 2001-ல் பணியின் போது இறந்தார். இதனால் கருணை வேலை கேட்டு அவரது மகள் பரணி சக்தி அரசிடம் 2006-ல் மனு அளித்தார். இவரது மனுவை நிராகரித்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து கருணை வேலை வழங்க உத்தரவிக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்து  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு:

கருணை வேலை போன்ற சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்களை அமல்படுத்தும்போது அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கருணை வேலை வழங்க வேண்டும். கருணை வேலை என்பது விதிவிலக்கானது. அதை சட்டப்பூர்வ உரிமையாக யாரும் கோர முடியாது.

லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் கனவு கருணை வேலைவாய்ப்பு திட்டத்தால் பறிபோகக்கூடாது. அரசு வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

இதனால் அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் திட்டமாக மட்டும் பார்க்காமல் அரசு ஊழியர் இறப்பால் உண்மையில் பாதிப்பை சந்திப்பவர்களுக்கு வேலை வழங்கும் திட்டமாக பார்க்க வேண்டும்.

இதனால் தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை தலைமை செயலர் முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஒத்த வகையில்  கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கை தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கை மீறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x